பறவைகள் பல விதம் – 14
வணக்கம் சுட்டிகளே. சுட்டி உலகத்தின் இம்மாதப் பறவை மேண்டரின் வாத்து. உலகின் மிக அழகான பறவைகளுள் மேண்டரின் வாத்தும் ஒன்று. சீனாவில் மேண்டரின் மொழி பேசப்படும் பகுதியைத் தாயகமாகக் கொண்ட வாத்துகள் என்பதால் மேண்டரின் வாத்துகள் எனப்படுகின்றன. அவற்றின் அழகு காரணமாக உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 1975-ஆம் ஆண்டு வரை சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான மேண்டரின் வாத்துகள் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு ஏற்றுமதி தடை செய்யப்பட்டுவிட்டது. தற்போது ஜப்பான், கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலும் மேண்டரின் வாத்துகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மேண்டரின் வாத்தின் உயிரியல் பெயர் Aix galericulata.

மயில்களைப் போலவே மேண்டரின் வாத்து இனத்திலும் ஆண் பறவையே மிக அழகாக இருக்கும். ஓவியம் வரைந்தது போன்று ஆரஞ்சு, ஊதா, பொன்மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம், பழுப்பு, கருப்பு எனக் கண்ணைக் கவரும் வண்ணங்களுடன் மிக அழகாகக் காட்சியளிக்கும். இனப்பெருக்கக் காலத்தில் பிடரி இறகுகளை சிலிர்ப்புக்கொண்டு அவை நடனம் ஆடும்போது அழகாக இருக்கும். பெண் வாத்து பளீர் வண்ணங்கள் ஏதுமற்று சாம்பல் பழுப்பு நிறத்தில் வெள்ளைத்திட்டுகளோடு காட்சியளிக்கும். மேண்டரின் வாத்துகளின் ஆயுட்காலம் 6 – 7 ஆண்டுகள்.
பொதுவாகவே வாத்துகள் உயரமாகப் பறக்காது என்ற தவறான நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது. சுட்டிகளே, தெரிந்துகொள்ளுங்கள். வாத்துகள் மிக உயரமாகவும் அதிக தூரமும் பறக்கக் கூடியவை. சில வாத்துகள் கண்டம் விட்டுக் கண்டம் வலசை செல்லக்கூடியவை. மேண்டரின் வாத்துகளும் குளிர்காலத்தில் தென்பகுதிக்கு வலசை செல்லும்.
முட்டையிடும் காலத்தில் பெண் மேண்டரின் வாத்து நீர்நிலைக்கு அருகில் உள்ள உயரமான மரத்தின் பொந்துக்குள் முட்டையிட்டு அடைகாக்கும். ஒரு தடவைக்கு பத்து முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடும். குஞ்சுகள் பொரிந்த பிறகு தாய் வாத்து முதலில் கீழே குதிக்கும். பிறகு குஞ்சுகளை அழைத்துக் குரல் கொடுக்கும். கிட்டத்தட்ட முப்பது அடி உயரத்திலிருந்து ஒவ்வொரு குஞ்சாக பொத் பொத் என்று கீழே குதிக்கும். அவற்றின் உடல் பஞ்சு உருண்டை போல எடை மிகவும் குறைவாக இருப்பதாலும், மரத்துக்குக் கீழே புற்களும் உதிர்ந்த இலைகளும் மெத்தை போல இருப்பதாலும் குஞ்சுகளுக்குக் காயம் ஏற்படாது. எல்லாக் குஞ்சுகளும் கீழே குதித்த பிறகு தாய் வாத்து அவற்றை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு தண்ணீருக்குச் செல்லும்.
மேண்டரின் வாத்துகள் மீன்களையும், நத்தைகள், பூச்சிகள் போன்ற சிற்றுயிர்களையும், பாசி மற்றும் நீர்த்தாவரங்களையும், தானியங்களையும் உண்ணும். மேண்டரின் வாத்துகள் பெரும்பாலும் காலையிலும் மாலையிலும் இரைதேடும். மற்ற நேரங்களில் மரக்கிளையில் அமர்ந்தோ, தரையில் அமர்ந்தோ ஓய்வெடுக்கும்.
சீனா, கொரியா ஜப்பான் ஆகிய நாடுகளில் மேண்டரின் வாத்துகள் இணைபிரியாத அன்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. அதனால் திருமண நாளில் மரத்தால் இழைக்கப்பட்ட மேண்டரின் வாத்து ஜோடியை மணமக்களுக்குப் பரிசாக அளிக்கும் வழக்கம் உள்ளது.
சுட்டிகளே, இப்போது அழகிய மேண்டரின் வாத்துகளைப் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(படங்கள் உதவி – Pixabay)