கொக்கரக்கோ – சிறுவர் பாடல்கள்

Kokkarako_book_cover

இத்தொகுப்பில் 40 பாடல்களும் 10 கதைப்பாடல்களும் உள்ளன.  குழந்தைகள் எளிதில் கற்றுக் கொண்டு பாடுவதற்கேற்ற வகையில் அவர்களுக்குத் தெரிந்த எளிமையான சொற்களிலும், இக்காலத் தலைமுறையை ஈர்க்கும் விதமாகப் புதிய பாடுபொருள்களுடனும் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

எதையும் உரைநடையில் கூறுவதை விடப் பாடல் வடிவில் கூறுவது குழந்தைகளின் மனதில் எளிதில் பதியும்.  ஆங்கில நர்சரி பாடல்களையே பாடும் நம் குழந்தைகள், தாய்மொழியாம் தமிழில் பாட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது, ‘தமிழில் பாட்டுப் பாடுவோம்’ என்கிற முதல் பாடல்.  அதிலிருந்து சில வரிகள்:-

அன்னைத்  தமிழில்  பாடுவோம்

அனுதினமும்  பாடுவோம்

தீந்தமிழில்  பாடுவோம்

தித்திக்கத்  தித்திக்கப் பாடுவோம்”

குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, இனிய ஓசையும், சந்தமும் அமைந்த பல பாடல்கள் இதில் உள்ளன. 

குடுகுடுவென உருண்டு ஓடும்

குண்டு குண்டு கோலிகுண்டு

பளபளவெனக் கண்பறிக்கும்

பளிங்கு என்னும் கோலிகுண்டு”

எனும் வரிகள், இதற்கோர் எடுத்துக்காட்டு!

‘சுண்டெலியும் எறும்பும்’ என்ற கதைப்பாட்டில் அமைந்துள்ள ஓசை நயமும் பாடி இன்புறத்தக்கது.

“குட்டிக் குட்டிச் சுண்டெலி

எட்டி எட்டிப் பார்த்த்து

தட்டு நிறைய கொட்டிக் கிடக்கும்

பொட்டுக் கடலை பார்த்தது”

‘கீச் கீச் கோழிக்குஞ்சு’ என்ற கதைப்பாடலில், குஞ்சுகளுக்கு அம்மா கோழி மண்ணை சீய்த்து இரையெடுக்கக் கற்றுக்கொடுக்கின்றது.  குஞ்சைக் கவ்வ வானில் வட்டமடிக்கும் கழுகைக் கண்டவுடன், குஞ்சுகளைத் தன் சிறகுக்குள்ளே பதுக்கிக் கொள்கிறது. 

அந்தக் காலத்தில் சிறு வயதில் நாம் பார்த்து ரசித்த இந்தக் காட்சியினைத் துல்லியமான விவரணையோடு, ‘முட்டையிலிருந்து ஆம்லெட் மட்டுமே வரும்’ என்ற புரிதல் உள்ள இக்காலக் குழந்தைகளுக்கு அழகாகக் காட்சிப்படுத்துகிறார் கீதா.

காகம் கூடு கட்ட மரம் தேடுகிறது.  ஒவ்வொரு மரமாக முன் வந்து என்னில் கட்டு என்கிறது.  ஒவ்வொரு மரத்தையும் காரணம் சொல்லி மறுத்துக் கடைசியில் வேப்ப மரத்தைத் தேர்வு செய்கிறது காகம்.  இக்கதைப்பாடல் வழியே சில மரங்களைப் பற்றிய உண்மை செய்திகளையும் குழந்தைகளுக்குச் சொல்கிறார் ஆசிரியர்.

“முருங்கை மரம் முன்னே வந்து

என்னில் கட்டு என்றதாம்

காற்றடித்தால் முறிந்திடுவாய்

வேண்டாம் வேண்டாம் என்றதாம்”

‘அக்கா அக்கா தேனக்கா’ என்ற கதைப்பாடல் குழந்தைகளுக்கு மெய்யெழுத்துகளை எளிதாய்க் கற்க உதவி செய்கிறது:-

“அக்கா அக்கா தேனக்கா

ங்கே இருப்பது யாரக்கா

ச்சைக்கிளிதான் பாரப்பா

கொஞ்சும் குரலைக் கேளப்பா……”

குழந்தைகள் பாடி மகிழ ஏற்ற இனிமையான பாடல்கள்.  அவசியம் வாங்கிக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள்.    

வகைசிறுவர் பாடல்கள்
ஆசிரியர்கீதா மதிவாணன்
வெளியீடுலாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18 +91) 98412 36965  
விலை₹ 75/-
Share this: