பறவைகள் பல விதம் – 5
வணக்கம் சுட்டிகளே. கிவி (Kiwi) பறவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் கூடவே நியூசிலாந்தும் நினைவுக்கு வருமே. ஆம், நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவைதான் கிவி. நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும் பறவை. அது மட்டுமல்ல, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினரின் செல்லப் பெயர் ‘Kiwis’.
ராட்டைட் எனப்படும் பறக்க இயலாத பறவையினங்களுள் கிவியும் ஒன்று. பார்ப்பதற்கு கோழியின் அளவில் சிறியதாக இருந்தாலும் கிவி பறவைக்குப் பல தனித்துவமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.
பறக்க முடியாத பறவை என்பதால் இறக்கைகள் இருக்காதோ என்ற சந்தேகம் வேண்டாம். கிவிக்கு இறக்கைகள் உண்டு. ஆனால் அளவில் மிகச்சிறியனவாக சுமார் 3 செ.மீ. அளவுதான் இருக்கும். அதனால் இறக்கை இருப்பதே வெளியில் தெரியாது. இறக்கைகளின் நுனியில் வௌவாலுக்கு இருப்பது போல சிறிய கொக்கிகள் இருக்கும். அதற்கான காரணம் தெரியவில்லை. கிவிக்கு வால் இறகு கிடையாது.
கிவியின் அலகும் ஸ்பெஷலானது. சுமார் 15 செ.மீ. அதாவது அரையடி நீளமுள்ள அலகின் நுனியில்தான் மூக்குத் துவாரங்கள் இருக்கும். இது வேறு எந்தப் பறவைக்கும் இல்லாத சிறப்பாகும். அதனால் கிவிக்கு மிகத் துல்லியமான மோப்பசக்தி உண்டு. தரைக்குள் இருக்கும் புழு பூச்சிகளை நுனி அலகால் மோப்பம் பிடித்து, மண்ணைக் கிளறி, அவற்றைத் தோண்டி எடுத்துத் தின்னும்.
கிவியின் மற்றொரு சிறப்பு அதன் முட்டை. பெண் கிவி, ஒரு ஈட்டுக்கு ஒரு முட்டைதான் இடும். முட்டையின் அளவு மிகப் பெரியதாக இருக்கும். அதாவது கோழி அளவுள்ள கிவியின் ஒரு முட்டை, ஆறு கோழிமுட்டை அளவுக்குப் பெரியதாக இருக்கும்.
கிவி பறவை மற்றப் பறவைகளிலிருந்து வேறுபடும் இன்னொரு விஷயம் இவற்றின் உறுதியான எலும்புகளும் வலிமையான கால்களும். பறக்கும் பறவைகளுக்கு உடல் எடை அதிகமாக இருக்கக்கூடாது என்பதால் அவற்றின் எலும்புகள் உள்ளே கூடாக இருக்கும். ஆனால் கிவி தரைவாழ் பறவை என்பதால் இதன் எலும்புகள் மஜ்ஜையோடு மிகவும் உறுதியாக இருக்கும்.
கிவியின் மற்றொரு சிறப்பு அம்சம், இது விலங்குகளைப் போல வளைக்குள் வசிக்கும் பறவை.
தன் வலிமையான கால்கள் மற்றும் கூரிய விரல் நகங்களால் மண்ணைத் தோண்டி வளை அமைக்கும். பகல் நேரங்களில் வளைக்குள் ஓய்வெடுக்கும். வெயில் தணிந்த பிறகுதான் வளையை விட்டு வெளியில் வந்து இரை தேடும்.
கிவி பறவை மற்றப் பறவைகளைப் போல கூடு கட்டாது என்பதும் வியப்பான விஷயம். வளைக்குள் இடப்பட்டு அடைகாக்கப்படுவதால் நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைத் தொற்று ஏற்படாத வகையில் கிவியின் முட்டைகள் மிகுந்த எதிர்ப்பாற்றலைக் கொண்டிருக்கும்.
80 நாட்கள் அடைகாத்த பிறகு கிவிக் குஞ்சு வெளிவரும். அதற்கு அம்மாவோ அப்பாவோ இரை எடுத்து வந்து ஊட்டாது. தானே மெல்ல வெளியில் வந்து தானே இரைதேடி உண்ண ஆரம்பிக்கும். கிவி பறவை சுமார் 50 வருடங்கள் வரை உயிர்வாழக் கூடியது.
என்ன சுட்டிகளே, இந்த மாதம் கிவி பறவை பற்றிப் பல புதிய தகவல்களை அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவையோடு உங்களை சந்திக்கிறேன்.
(படம் உதவி – rawpixel.com)