விநோத விலங்குகள் – 12
வணக்கம் சுட்டிகளே. ஆஸ்திரேலியா என்று சொன்னாலே கங்காரூவும் கங்காரூ என்றாலே ஆஸ்திரேலியாவும் உங்கள் நினைவுக்கு வரும். ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரூவைப் பற்றிதான் இந்த மாதம் சுட்டி உலகத்தில் பார்க்கவிருக்கிறீர்கள்.
மற்ற விலங்கினத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட விநோத விலங்கினம் கங்காரூ. இது பாலூட்டிகளிலேயே மார்சுபியல் என்னும் பிரிவைச் சேர்ந்தது. மார்சுபியல் விலங்கினத்தில் பெண்விலங்குகளின் வயிற்றில் குட்டிகளை வளர்க்க, பை போன்ற அமைப்பு இருக்கும். இவற்றின் குட்டிகள் பிறக்கும்போது முன்னங்கால்களையும் வாயையும் தவிர வேறு எந்த உறுப்பும் வளர்ச்சி அடையாத நிலையில் பிறக்கும். பார்ப்பதற்கு ஒரு புழு போல இருக்கும் அவை பிறந்தவுடனேயே ஊர்ந்து தாயின் பைக்குள் போய்விடும். அங்கேயே பாலைக் குடித்துக்கொண்டு மிச்ச வளர்ச்சியை வளர்ந்து முடிக்கும். பிறகுதான் வெளியில் தலையையே காட்டும். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
கங்காரூ இனத்தில் அறுபதுக்கும் மேற்பட்டவை உள்ளன. அனைத்திலும் பெரியது சிவப்புக் கங்காரூ. ஆண் சிவப்புக் கங்காரூ செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதுதான் ஆஸ்திரேலியாவின் அரசு முத்திரையிலும் இடம்பெற்றுள்ளது. இதன் எடை சுமார் 90 கிலோ இருக்கும். பின்னங்கால்களால் இது எழுந்து நின்றால் ஓராள் உயரத்தை விடவும் அதிகமாக இருக்கும்.
பெண் கங்காரூ சாம்பல் நிறத்தில் இருக்கும். அதன் எடை 40 கிலோ அளவே இருக்கும். இவற்றின் குட்டியோ பிறக்கும்போது 2 கிராம் எடை மட்டுமே இருக்கும். ஆறு மாதங்கள் வரை தாயின் வயிற்றுப் பைக்குள் இருந்துகொண்டு உள்ளேயே பாலைக் குடித்துக்கொண்டு பாதுகாப்பாய் வளரும். முற்றிலும் வளர்ச்சி அடைந்த பிறகு, குழந்தைகள் ஏணையிலிருந்து தலையை நீட்டிப் பார்ப்பது போல அவ்வப்போது தலையை நீட்டி வெளியில் பார்க்கும். பிறகு மெதுவாகப் பையை விட்டுக் கீழே இறங்கிப் புல் மேயப் பழகும்.

கங்காரூ தாவர உண்ணி. ஆடு மாடு போல புல் மேயும். ஆனால் இவை பொழுதாடிகள் என்பதால் மாலையில் சூரியன் மறைந்த பிறகும் விடிகாலையிலும் மட்டுமே மேயும். பகலில் மர நிழலில் படுத்து ஓய்வெடுக்கும்.
கங்காரூக்கள் ஓடும்போது கவனித்திருக்கிறீர்களா? மற்ற விலங்குகளைப் போல நிலத்தில் நான்கு கால்களையும் ஊன்றி ஓடாது. இவற்றின் பின்னங்கால்களோடு ஒப்பிடும்போது முன்னங்கால்கள் மிகவும் சிறியவை. நடக்கும்போது மட்டுமே அவற்றை ஊன்றி நடக்கும். ஓடும்போது வாலையும் பின்னங்கால்களையும் ஊன்றித் தாவித் தாவி ஓடும். கங்காரூக்களின் வால் மிகவும் வலிமையானது. வால்தான் அதன் உடலை ஓடும்போது பேலன்ஸ் பண்ணும். கங்காரூ நன்றாக நீந்தும். நீந்தும்போதும் அதன் வால்தான் உதவுகிறது.
கங்காரூக்கள் பொதுவாக சாதுவானவை. ஆனால் ஆபத்து என உணர்ந்தால் எதிரியை பலமாகத் தாக்கும். அதற்குதான் கொம்புகூடக் கிடையாதே. எப்படித் தாக்கும்? முன்னங்கால்களால் குத்துச்சண்டை வீரரைப் போல நன்றாகக் குத்து விடும் அல்லது வாலை ஊன்றி, நின்ற நிலையில் பின்னங்கால்களால் ஒரு உதை விடும். அவ்வளவுதான். எதிரி சுருண்டு விழுந்துவிடுவது உறுதி.
கங்காரூ ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற பெருமையைப் பெற்றிருந்தாலும் இதன் இறைச்சி உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதி ஆகி பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. கங்காரூவின் தோல் கைப்பை, காலணி போன்ற தோல்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் பாடல்கள், நடனம், பாரம்பரிய ஓவியங்கள் அனைத்திலும் கங்காரூக்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் ஒரு டாலர் நாணயத்தில் கங்காரூ உருவப்படம் இடம்பெற்றுள்ளது.
சுட்டிகளே, ஆஸ்திரேலியாவின் விநோத விலங்கான கங்காரூவைப் பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(படங்கள் உதவி – Pixabay)