பறவைகள் பல விதம் – 13
வணக்கம் சுட்டிகளே. இந்த மாதப் பறவையின் பெயர் என்ன தெரியுமா? காக்கப்போ! எதைக் காக்கப்போகிறது? என்ற சந்தேகம் வருகிறதா? நியூசிலாந்தின் பூர்வகுடி மொழியான மாவோரி மொழியில் ‘காக்கப்போ’ என்றால் ‘இரவுக்கிளி’ என்று அர்த்தம். கிளி இனத்தைச் சேர்ந்த காக்கப்போ நியூசிலாந்தில் மட்டுமே காணப்படுகிறது. பார்ப்பதற்கு கொஞ்சம் ஆந்தை போன்ற தோற்றம் இருப்பதால் தமிழில் ‘ஆந்தைக்கிளி’ என்று சொல்லப்படுகிறது.
கிளி இனங்களிலேயே பறக்கவியலாத கிளி இது மட்டுமே. இதற்கு விலா எலும்புகளையும் இறக்கை எலும்புகளையும் இணைக்கும் மார்பெலும்பு கிடையாது. அது மட்டுமல்ல, இதன் சிறகுகளும் உடலின் அளவோடு ஒப்பிடும்போது மிகச் சிறியவை. பறக்க இயலாத இப்பறவை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவும்போது கீழே விழுந்துவிடாமல் பேலன்ஸ் பண்ணுவதற்கு மட்டுமே அவை உதவுகின்றன. அதனால் பெரும்பாலும் இப்பறவை நிலத்திலேயே காணப்படும்.

உலகின் அதிக எடையுள்ள கிளியும் இதுதான். ஆண் காக்கப்போ சுமார் நான்கு கிலோ எடையுடனும் பெண் காக்கப்போ அதில் பாதி அளவு அதாவது இரண்டு கிலோ எடையுடனும் இருக்கும். இதன் உடல் இரண்டு அடிக்கும் அதிகமான நீளம் இருக்கும். காக்கப்போவின் ஆயுட்காலம் 80 முதல் 100 வருடங்கள் வரை என்றால் மலைப்பாக இருக்கிறது அல்லவா?
காக்கப்போ ஒரு இரவாடி. இரவு நேரத்தில் மட்டுமே இரை தேட வெளியில் வரும். பகல் நேரங்களில் ஏதேனும் மரங்கள் அடர்ந்த பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஓய்வெடுக்கும். ஆபத்து நெருங்கும் நேரத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும். இலைப்பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கலந்த கலவையான இதன் நிறம் உருமறைப்புக்கு மிகவும் உதவுகிறது. இதன் உடலிலிருந்து ஊசிப்போன, புளித்த வாடை அடிக்கும். அதன் மூலம் இதன் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும்.
காக்கப்போவுக்கு நல்ல மோப்ப சக்தி உண்டு. இரவுப் பறவை என்பதால் இரைதேடுவதற்கு பார்வைத் திறனை விடவும் மோப்ப சக்தியே பெரிதும் உதவுகிறது. காக்கப்போ பறவை பழங்கள், தானியங்கள், விதைகள், துளிர்கள், மகரந்தம், மரங்களின் சாறு போன்றவற்றை உணவாக உட்கொள்ளும்.
காக்கப்போ பறவை இரண்டு முதல் நான்கு வருடத்துக்கு ஒரு தடவைதான் முட்டையிடும். தரையில் அலத்து புதர் மறைவில் கூடு அமைத்து ஒன்று முதல் நான்கு முட்டைகள் வரை இடும். கூடு அமைத்தல், முட்டைகளை அடைகாத்தல், குஞ்சுகளுக்கு இரையூட்டி வளர்த்தல் அனைத்தையும் தாய்ப்பறவை மட்டுமே தனியாகச் செய்யும். குஞ்சுகள் ஆறு மாதம் வரை தாயுடன் இருக்கும். பெண் பறவைகள் ஒன்பது வருடங்கள் கழித்துதான் முதிர்ச்சி அடையும். அப்போதுதான் முட்டையிடத் தொடங்கும்.
மாவோரி பூர்வகுடி மக்கள் இப்பறவைகளை உணவுக்காகவும் இறகுகளுக்காகவும் முற்காலத்தில் வேட்டையாடினர். அவர்களுடைய பாரம்பரியக் கதைகளிலும் காக்கப்போவுக்கு முக்கிய இடம் உண்டு. தரையில் வாழ்வதால் நாய், பூனை போன்றவற்றுக்கு எளிதில் இரையாகிவிடுகின்றன. அதனால் இவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவருகிறது. 2022-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி நியூசிலாந்தில் மொத்தம் 250 காக்கப்போ பறவைகளே உள்ளன. இவற்றின் இனத்தைப் பெருக்குவதற்கு நியூசிலாந்து அரசு பற்பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
சுட்டிகளே, இதுவரை கேள்விப்படாத காக்கப்போ பறவையைப் பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்து வேறொரு அரிய பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(படம் உதவி – விக்கிபீடியா & பிக்ஸாபே)