செதில் எறும்புத்தின்னி

Indian pangolin

விநோத விலங்குகள் – 16

வணக்கம் சுட்டிகளே. விநோத விலங்குகள் வரிசையில் இன்று நீங்கள் அறியவிருப்பது இந்தியப் பாங்கோலின் என்ற செதில் எறும்புத்தின்னியைப் பற்றிதான். எறும்புத்தின்னி தமிழில் அழுங்கு, அலங்கு, அலுங்கு என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்திய செதில் எறும்புத்தின்னி இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. இதற்கு அடர்வால் பாங்கோலின் என்ற பெயரும் உண்டு. இவற்றின் அடிவயிறு, கால்களின் உட்புறம் ஆகியவற்றைத் தவிர உடலெங்கும் கடினமான செதில் போன்ற அடுக்குகள் காணப்படும். செதில்கள் கேரட்டீன் எனப்படும் நார்ப்புரதத்தால் ஆனவை. விலங்குகளின் கொம்பு, நகம், முள், முடி, ஓடு, செதில், பறவைகளின் அலகு, இறகு போன்றவையும் கேரட்டீனால் ஆனவைதான்.    

செதில் எறும்புத்தின்னிகள் ஆபத்து சமயத்தில் உடலைப் பந்துபோல சுருட்டிக்கொள்ளும். எவ்வளவு முயற்சி செய்தாலும் யாராலும், எந்த விலங்காலும் அதைப் பிரிக்கவும் முடியாது. கடினமான மேலோட்டைத் துளைத்துக் கடிக்கவும் முடியாது. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற கொடிய கொன்றுண்ணிகள் கூட தங்கள் முயற்சியில் தோற்றுப்போய், செதில் எறும்புத்தின்னியை விட்டுவிட்டுப் போய்விடும்.

செதில் எறும்புத்தின்னிகள் இரை கிடைக்கும் இடத்தில் வளை தோண்டி அதில் வசிக்கும். இவை இரவாடிகள் என்பதால் பகல் முழுவதும், வளைக்குள் சுருண்டு படுத்துத் தூங்கும். இவற்றுக்குத் துல்லியமான கண்பார்வை கிடையாது. இரவு நேரத்தில் இரைதேடப் போவதால் அதற்கான அவசியமும் கிடையாது. ஆனால் அபாரமான மோப்பசக்தி உண்டு.

செதில் எறும்புத்தின்னியின் பிரதான இரை எறும்புகளும் கரையான்களும். துல்லியமான மோப்ப சக்தியால் இரை எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடும். அடுத்து, கூரிய முன்னங்கால் நகங்களால் புற்றுகளையும் மரக்கட்டைகளையும் தோண்டும். பிறகு தனது நீளமான, பசையுள்ள நாக்கை உள்ளே நுழைத்து கரையான் மற்றும் எறும்புகள், அவற்றின் முட்டைகள், லார்வாக்கள் போன்றவற்றைத் தின்னும். எப்போதாவது வண்டு, கரப்பான்பூச்சி போன்றவற்றைத் தின்னும். இதற்குப் பற்கள் கிடையாது. உணவை அப்படியே விழுங்கிவிடும். எறும்பு, கரையான் ஆகியவற்றோடு வயிற்றுக்குள் போகும் மண்துகள், இரைப்பையில் உணவை அரைக்கும் வேலையைச் செய்யும்.

செதில் எறும்புத்தின்னி இனப்பெருக்கக்காலத்தில் ஒரே ஒரு குட்டி போடும். தாய் எறும்புத்தின்னி குட்டியை முதுகுப் பகுதியில் தூக்கிக்கொண்டு இரை தேடச் செல்லும். ஆபத்து சமயத்தில் குட்டியை வயிற்றுப்பக்கம் கொண்டுவந்து பாதுகாப்பாய்ச் சுருண்டுகொள்ளும். 

இந்திய செதில் எறும்புத்தின்னியின் உடல் சுமார் 48 செ.மீ. நீளம் வரை இருக்கும். எடை 10 -16 கிலோ அளவில் இருக்கும். காப்பகங்களில் இவை சுமார் இருபது ஆண்டுகள் வாழ்கின்றன.

செதில் எறும்புத்தின்னிகள் பார்ப்பதற்கு ஆர்மடில்லோ எனப்படும் கவச எறும்புத்தின்னிகளைப் போன்று இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை.  

செதில் எறும்புத்தின்னிகளின் செதில்களுக்கு மருத்துவக்குணம் இருப்பதாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் நம்பப்படுவதால் உலகெங்கிலும் இருந்து அவை திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டு சீனாவுக்குக் கடத்தப்படுகின்றன. ஆபத்து சமயத்தில் சுருண்டுகொள்ளும் அவற்றின் தற்காப்பு இயல்பே கடத்தல்காரர்களிடம் எளிதில் சிக்கிக்கொள்ள வழிவகுத்துவிடுகிறது.

‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கத்தின் கணிப்பின் படி, கடந்த பத்து வருடத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் அலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சுமார் ஆறாயிரம் அலங்குகள் பிடிக்கப்பட்டன. பெரும்பாலானவை தமிழ்நாட்டிலும் மணிப்பூரிலும் கள்ள வேட்டையாடப்பட்டவை’ எனக் குறிப்பிடுகிறார் காட்டுயிர் ஆர்வலரான தியடோர் பாஸ்கரன் ஐயா.

செதில் எறும்புத்தின்னிகளை அவற்றின் அழிவிலிருந்து மீட்க, உலகம் முழுவதும் பற்பல சூழலியல் அமைப்புகளும் தன்னார்வலர்களும் இயன்ற வழியில் எல்லாம் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

சுட்டிகளே, இந்திய செதில் எறும்புத்தின்னியைப் பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கோடு உங்களைச் சந்திக்கிறேன்.  

(படங்கள் உதவி – விக்கிபீடியா)

Share this: