தேன் வளைக்கரடி

Honeybadger

விநோத விலங்குகள் – 13

வணக்கம் சுட்டிகளே. உலகிலேயே ‘கொஞ்சம் கூட பயமே இல்லாத விலங்கு’ என்று ஒரு விலங்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அது எது தெரியுமா? அந்த விநோத விலங்கைப் பற்றிதான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

Honey badger அல்லது Ratel எனப்படும் அவ்விலங்கு தமிழில் ‘தேன் வளைக்கரடி’ என்று குறிப்பிடப்படுகிறது. கரடி என்று சொல்லப்பட்டாலும் இது கரடி இனம் கிடையாது. கீரி இனத்தைச் சேர்ந்தது. பிறகு ஏன் இதற்கு இப்படி ஒரு பெயர் வந்தது? கரடியைப் போல தேனடைகளை விரும்பித் தின்பதாலும், வளைக்குள் வசிப்பதாலும் இதை ‘தேன் வளைக்கரடி’ என்று சொல்கிறோம்.

ஆப்பிரிக்கா, இந்தியா, தென்மேற்கு ஆசியா போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மூன்று வனவிலங்கு சரணாலயங்களிலும் தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் வனப்பகுதியிலும் காணப்படுகின்றன. தேன் வளைக்கரடி புசுபுசுவென்று கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும். கருப்பு உடலில்  உச்சந்தலையிலிருந்து வால் வரைக்கும் முக்காடு போட்டது போல் வெள்ளை நிறம் காணப்படும். பார்ப்பதற்கு ஸ்கங்க் போல இருப்பதோடு,  ஸ்கங்க் போலவே ஆபத்து சமயத்தில் துர்நாற்ற வாயுவை வெளியேற்றும்.  ஆனால் ஸ்கங்க் அளவுக்கு துர்நாற்றம் வீரியம் மிகுந்ததாக இருக்காது. மேலும் இவை இரண்டும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை. தேன் வளைக்கரடியின் உயிரியல் பெயர் Mellivora capensis என்பதாகும். மெல்லிவோரா பேரினத்தைச் சேர்ந்த ஒரே சிற்றினம் இதுவாகும்.

தேன் வளைக்கரடியின் சிறப்புத்தன்மை அதன் பயமற்ற தன்மைதான். அஞ்சா நெஞ்சம், கடினமான மேல்தோல், கூரான பற்கள், வலிமையான கால் விரல்கள் இவற்றோடு துர்நாற்ற வீச்சும் சேர்ந்தால் எதிரிகளின் கதி என்னாகும்? தாக்க வரும் எதிரிகள் தாங்கள் தப்பித்தால் போதும் என்று பின்வாங்கி ஓடிவிடும். சிங்கம், சிறுத்தை, முதலை போன்ற பெரிய விலங்காக இருந்தாலும் சரி, கடுமையான விஷமுள்ள பாம்பாக இருந்தாலும் சரி, இது துளியும் பயப்படாது. சிங்கம் என்ன முயற்சி செய்தாலும் தேன் வளைக்கரடியின் தோலைக் கடிக்கவே முடியாது. அந்த தைரியம்தான் தேன் வளைக்கரடியைத் துணிந்து எதிர்த்து நிற்கச் செய்கிறது. பாம்பு கொத்தினால் கூட அதன் தோலைத் துளைத்து விஷம் உள்ளே போகாது. தேனடையைச் சூறையாடும்போது தேனீக்கள் படையாக வந்து கொட்டினாலும் அதற்கு ஒன்றுமே ஆகாது. இவற்றிலிருந்தே தேன் வளைக்கரடியின் தோலின் கடினத்தன்மையை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?

ஆப்பிரிக்காவின் ஹனிபேட்ஜர்கள் தேனடை இருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடிக்கும் தெரியுமா? Honeyguide என்ற பறவைகளின் துணையோடுதான். தேன்சிட்டுகளைப் போல தேனை விரும்பியுண்ணும் அப்பறவைகள் தேன் வளைக்கரடிக்கு தேனடை இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுக்கும். பறவைகளின் சத்தத்தைப் பின்தொடர்ந்து செல்லும் தேன் வளைக்கரடி தேனீக்களை விரட்டித் தேனடையைக் கைப்பற்றும். தேன் உண்ணும் பறவைகளும் அதனால் பயன் அடையும். குட்டிப் பறவைகளாக இருந்தாலும் எவ்வளவு சாமர்த்தியம் பாருங்க.  

தேன் வளைக்கரடி ஒரு அனைத்துண்ணி. தேனும் தேனீக்களின் லார்வாக்களும் தேனடையும் மிகவும் பிடித்தமான உணவு என்றாலும் பூச்சி, ஓணான், உடும்பு, பாம்பு போன்ற சிற்றுயிர்கள் முதல் பறவைகள், சிறிய விலங்குகள் வரை வேட்டையாடி உண்ணும். இறந்த, அழுகிய விலங்குகளின் உடல்களையும் தின்னும். பழங்களையும் தின்னும்.

தேன் வளைக்கரடிகள் இனப்பெருக்கக் காலம் தவிர்த்த மற்றக் காலங்களில் குறிப்பிட்ட எல்லைப்பகுதிக்குள் தனித்தனியாக வளை அமைத்து அதில் வாழும். ஒரு தடவைக்கு ஒரு குட்டிதான் போடும். இரண்டு வருடம் வரை குட்டி தாயுடனேயே இருக்கும். தாய் அதற்கு வேட்டையாடும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும். குட்டி வளர்ந்து ஓரளவு பயிற்சி பெற்றதும் தனி வளை அமைத்து தனியாக வாழ ஆரம்பிக்கும்.

சுட்டிகளே, உலகின் பயமற்ற விலங்கு பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி – விக்கிமீடியா காமன்ஸ்)

Share this: