நீர்யானை

hippo

விநோத விலங்குகள் – 11

வணக்கம் சுட்டிகளே. யானைக்கு அடுத்தபடியாக நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் நீர்யானை. உருவத்தில் யானை போலப் பெரியதாக இருப்பதாலும் அதிக நேரம் நீரில் வசிப்பதாலும் இதைத் தமிழில் ‘நீர்யானை’ என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் இதன் பெயர் Hippopotamus. கிரேக்க மொழியில் ஹிப்போ என்றால் குதிரை. போடமஸ் என்றால் ஆறு. ‘ஆற்றில் வாழும் குதிரை’ என்ற பொருளில் இது ஹிப்போபோடமஸ் எனப்படுகிறது. நம்முடைய அண்டை மாநில மொழியான மலையாளத்தில் இதன் பெயர் ‘நீர்க்குதிரை’தான்.

நீர்யானை 3.5 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரமும் இருக்கும். அதன் எடையோ 3200 கிலோ வரை இருக்கும்.

வாழ்நாளில் பாதிநேரம் நீரில் வசித்தாலும் நீர்யானைக்கு நீந்தத் தெரியாது என்பது எவ்வளவு ஆச்சர்யம்! பெரும்பாலும் ஆழம் அதிகமில்லாத நீர்நிலைகளில் எருமை மாடு போல தண்ணீரில் ஊறிக்கொண்டு கிடக்கும். ஆழம் அதிகமிருந்தால் அப்போதும் பிரச்சனை இல்லை. தண்ணீருக்குள் உள்ள தரையின் மீது எம்பி எம்பி நடக்க முடியும். முழு உடலும் முங்கியநிலையில் அங்கேயே தூங்கவும் முடியும். ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை மட்டும் மேலே வந்து மூச்சு விட்டுப் போகும்.

நீர்யானை இரண்டு வருடத்துக்கு ஒரு குட்டி போடும். நீர்யானைகள் குட்டி போடுவதும் பாலுட்டுவதும் கூட தண்ணீருக்குள்தான். தண்ணீருக்குள் இருக்கும்போது அவற்றின் காதுகளும் மூக்குத்துவாரங்களும் தண்ணீர் புகாதபடி மூடிக்கொள்ளும் என்பது வியப்பாக உள்ளது அல்லவா?

நீர்யானைகள் கூட்டமாக வசிக்கும். எப்போதும் உரத்தக் குரலில் ஆரவாரம் செய்தபடி இருக்கும். கூட்டத்தின் தலைவனாக பலம் வாய்ந்த ஆண் நீர்யானை இருக்கும். சில சமயம் தலைமையைக் கைப்பற்ற இரண்டு ஆண் நீர்யானைகளுக்குள் சண்டை நடக்கும். அப்போது இரண்டும் தங்கள் வாயை அகலமாகத் திறந்து, குட்டித் தந்தம் போன்ற கூர்மையான கோரப்பற்களால் ஒன்றை ஒன்று தாக்கும். சண்டை மிக மூர்க்கமாக இருக்கும்.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் அதீத வெப்பத்தை சமாளிக்க நீர்யானைகள் எப்போதும் தண்ணீரிலேயே வசிக்கின்றன. மாலைப் பொழுது ஆன பிறகுதான் தண்ணீரை விட்டு வெளியில் வருகின்றன.

நீர்யானையின் தோலில் சிவப்பு நிறத்தில் எண்ணெய் போன்ற திரவம் சுரப்பதால் எப்போதும் மினுமினுவென்று காணப்படும். சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுக்க அத்திரவம் உதவுகிறது.

நீர்யானை ஒரு தாவர உண்ணி. நீரில் வாழ்ந்தாலும் நீர்யானை மீன் தின்னாது. தண்ணீருக்குள் வளரும் நீர்த்தாவரங்களை மட்டுமே தின்னும். இரவு நேரத்தில்தான் அது புல் மேயும். ஒரு இரவில் அது சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை நடந்து, 45 – 50 கிலோ எடை அளவுக்குப் புல் மேயும். அதிகப்படியாக உணவு கிடைத்தால் நீர்யானைகள் அவற்றைத் தங்கள் இரைப்பையில் சேமித்து வைத்துக்கொள்ளும். அதன்பிறகு மூன்றுவார காலம் வரையிலும் கூட உணவு உண்ணாமல் இருக்கமுடியும்.

ஆண் நீர்யானை ‘எருது’ என்றும் பெண் நீர்யானை ‘பசு’ என்றும் குட்டி ‘கன்று’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நீர்யானைகளின் ஆயுட்காலம் சுமார் 40 வருடங்கள்.  

சுட்டிகளே, விநோதமான நீர்யானை பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கு பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

(படங்கள் உதவி – Pixabay)

Share this: