பறவைகள் பல விதம் – 6
வணக்கம் சுட்டிகளே. படத்திலிருக்கும் பறவையைப் பாருங்க. எவ்வளவு மிடுக்கு! தலையைச் சுற்றி ஒளிவட்டம் போட்டதுபோல, சூரியனின் பொன்னிறக் கதிர்களைப் போல அழகாக உள்ளது அல்லவா? இந்தப் பொன்னிற இறகுகள் மற்ற இறகுகளைப் போல மிருதுவானவை அல்ல. சற்றுக் கடினமானவை. அதனால்தான் ஈர்க்குச்சிகளைச் சொருகி வைத்ததுபோல் அப்படியே நேராக நிற்கின்றன.
கொக்கு இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை சாம்பல் நிறத்தில் இருப்பதாலும் தலையில் தங்க நிறத்தில் கிரீடம் அணிந்தது போல இருப்பதாலும் ‘சாம்பல் கிரீடக் கொக்கு‘ (Grey crowned crane) எனப்படுகிறது. அது மட்டுமா? ஆப்பிரிக்கக் கொக்கு, கிரீடக் கொக்கு, தங்கக் கிரீடக் கொக்கு, கொண்டைக் கொக்கு என இதற்குப் பல பெயர்கள் உண்டு. இதன் அறிவியல் பெயர் Balearica regulorum என்பதாகும்.
சாம்பல் கிரீடக் கொக்கின் தாயகம் ஆப்பிரிக்கா. இவை பொதுவாக ஆப்பிரிக்காவின் சவான்னா புல்வெளிகளில் காணப்படும்.
உகாண்டா நாட்டின் தேசியப் பறவை என்ற சிறப்பு இதற்கு உண்டு. உகாண்டாவின் தேசியக்கொடியிலும் அரசுச் சின்னத்திலும் இப்பறவை இடம்பெற்றுள்ளது.
கென்யா, நமீபியா, ஜாம்பியா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் இந்த சாம்பல் கிரீடக் கொக்குகள் புனித அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. சில இடங்களில் இவை நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மழையைக் கொண்டுவரும் தூதுவனாகவும் கருதப்படுவதால் ஆப்பிரிக்க மக்களின் மதச் சடங்குகளின்போது இவற்றின் உருவங்கள் இடம்பெறுகின்றன.
சாம்பல் கிரீடக் கொக்கின் ஆண் பெண் இரண்டுக்குமே தலையில் கிரீடம் இருக்கும். பொன்னிற இறகுக் கிரீடமும் பளீர் சிவப்பு நிறத் தாடையும் வெள்ளை நிறக் கன்னங்களும் உடைய மிக அழகான பறவை இது. உலகின் மிக அழகிய பறவைகள் வரிசையில் இதற்கு எப்போதும் இடம் உண்டு.
சாம்பல் கிரீடக் கொக்குகள் பெரும்பாலான நேரம் தரையில் இரைதேடிக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். விதைகள், தானியங்கள், புழு, பூச்சிகள், பாம்புகள், எலி, தவளை போன்ற சிற்றுயிர்கள், மீன்கள் போன்றவற்றைத் தின்னும்.
உண்ணிக்கொக்குகள் கால்நடைகளின் பின்னால் திரிவதைப் போல இவையும் மான் கூட்டத்தின் பின்னால் திரியும். மான்கள் புற்களை மேயும் போது வெளிப்படும் புழு பூச்சிகளைத் தின்னும். சில சமயம் இவை தங்களுடைய கால்களை வேகமாகத் தரையில் தட்டுவதன் மூலம் உள்ளே இருந்து வெளிப்படும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். எவ்வளவு சாமர்த்தியம்!
சாம்பல் கிரீடக் கொக்குகள் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் முப்பது முதல் நூற்றைம்பது கொக்குகள் வரையிலும் இருக்கும். இவை ஒரு தடவை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரியவே பிரியாது. இரண்டும் சேர்ந்து இறக்கைகளை விரித்தும் குதித்தும் அடிக்கடி நாட்டியம் ஆடும். இறக்கையை விரித்தால் இரண்டு மீட்டர் நீளத்துக்கு இருக்கும்.
முட்டையிடும் காலத்தில் ஆண் பெண் இரண்டும் சேர்ந்து சதுப்பு நிலப் பகுதியில் ஒரு பெரிய கூடு கட்டும். பெண் கொக்கு இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். ஆண் பெண் இரண்டும் சேர்ந்தே அடைகாத்துக் குஞ்சுகளை வளர்க்கும்.
சாம்பல் கிரீடக் கொக்குகள் பகல் முழுவதும் நிலத்தில் இரைதேடித் திரிந்தாலும் இரவு வேளையில் மரக்கிளைகளில் அமர்ந்துதான் தூங்கும்.
சுட்டிகளே, ஆப்பிரிக்காவின் அழகான சாம்பல் கிரீடக் கொக்கு பற்றி அறிந்துகொண்டீர்களா? வேறொரு பறவை பற்றிய தகவல்களுடன் அடுத்த மாதம் சந்திக்கிறேன்.
(படம் உதவி – Pixabay)