புல் மரம்

புல் மரம்

மரம் மண்ணின் வரம் – 8

வணக்கம் சுட்டிகளே. புல் மரம் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்குக் குழப்பமாக இருக்கும். புல் எப்படி மரமாகும்? புல் வகை வேறு, மர வகை வேறாச்சே என்று யோசிப்பீங்க. இது ஒரு வித்தியாசமான மரம். அதாவது பார்ப்பதற்கு கனத்த அடித்தண்டுடன் உயரமாக மரம் போலக் காணப்படும். ஆனால் உண்மையில் புல் வகையைச் சேர்ந்தது.

பெரும்பாலும் புற்களுக்குக் குறுகிய ஆயுட்காலமே இருக்கும். ஆனால் இந்தப் புல் மரம் 600 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. அப்படியென்றால் இதை மரம் என்று சொல்வது சரிதானே?

பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த புல் மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா. கடற்கரை, சதுப்பு, பாலை என எந்த இடத்திலும் வளரக்கூடியது புல் மரம். வறட்சி, கடுங்குளிர் எதையும் தாங்கக்கூடியது. மரம் வளர வளர காய்ந்துபோன இலைகள் மரத்தைச் சுற்றித் தொங்கியபடி இருக்கும். காட்டுத்தீயின் போது அவை மட்டும் எரிந்து நடுத்தண்டு தீயினால் சேதப்படாமல் பாதுகாக்கப்படும். அதனால் காட்டுத்தீக்குப் பிறகு உயிர்த்தெழும் முதல் மரமாக இந்தப் புல் மரம் உள்ளது. உயிர்த்து முளைவிடுவதோடு காடு எரிந்ததனால் கிடைக்கும் சாம்பலை உரமாகக் கொண்டு பூக்கவும் தொடங்கும்.

இப்பேரினத்தின் அறிவியல் பெயர் Xanthorrhoea . இந்த இனத்தில் சுமார் 30 வகை உள்ளன. அனைத்துமே ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. புல்மரத்தின் வளர்ச்சி மிக மெதுவாகவே இருக்கும்.

ஒரு வருடத்துக்கு ஒரு அங்குலம் மட்டுமே வளரும். அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் ஆறு மீட்டர் உயரம் வரையிலும் கூட வளரக்கூடியவை புல் மரங்கள்.

புல் மரத்தின் உச்சியில் சுமார் ஒரு மீட்டர் முதல் நான்கரை மீட்டர் உயரம் வரையுள்ள நீளமான ஈட்டி போன்ற பூந்தண்டு வளரும். கங்காருவின் மொத்தமான வாலைப் போல இருப்பதால் இம்மரத்துக்கு ‘கங்காரு வால்’ என்ற பெயரும் உண்டு. ஒரு பூந்தண்டில் ஆயிரக்கணக்கானப் பூக்கள் இருக்கும். பூக்களின் தேனை அருந்துவதற்காக தேனுண்ணும் பறவைகளும் நூற்றுக்கணக்கானத் தேனீக்களும் வண்டுகளும் படையெடுத்து வரும்.  

புல் மரத்தின் பூந்தண்டு மிகவும் உறுதியானதாக இருப்பதால் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் இதைக் கொண்டு மீன்களை வேட்டையாடும் ஈட்டிகளைத் தயாரித்தனர். ஒவ்வொரு பூந்தண்டிலிருந்தும்  சுமார் பத்தாயிரம் விதைகள் வரை உருவாகும். அப்போது கருப்பு நிறத்தில் காணப்படும். தூரத்திலிருந்து பார்க்கும்போது பூர்வகுடி சிறுவன் ஈட்டியைக் கையில் நெட்டுக்குத்தாக ஏந்தியபடி நிற்பதுபோலத் தோன்றியதால் முன்னாளில் இது ‘black boy’ என்றழைக்கப்பட்டது.

புல் மரத்திலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் வாசனையான பிசின் கிடைக்கும். முற்காலத்தில் தேவாலயங்களில் சாம்பிராணிக்குப் பதிலாக அப்பிசினைப் பயன்படுத்தினார்களாம்.

சுட்டிகளே, இந்த மாதம் சுட்டி உலகத்தில் புல் மரம் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு மரம் பற்றியத் தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன்.

(படங்கள் Arun & Geetha)

Share this: