பாண்டா

Giant panda

விநோத விலங்குகள் – 6

வணக்கம் சுட்டிகளே! உங்களில் பலரும் ‘குங்ஃபூ பாண்டா’ திரைப்படம் பார்த்திருப்பீங்க. அதில் பயந்தாங்கொள்ளியாக இருந்துகொண்டே சாகசங்கள் செய்யும் ‘போ’ எனப்படும் குண்டு பாண்டாவை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். அதே திரைப்படத்தில் ‘ஷிஃபூ’ என்ற வயதான மாஸ்டராக வருவதும் பாண்டாதான். அது நேபாளத்தைத் தாயகமாகக் கொண்ட சிவப்புப் பாண்டா.

‘பாண்டா’ என்று மட்டும் சொன்னால் அது எந்தப் பாண்டா? என்ற சந்தேகம் வருவதால் கருப்பு வெள்ளை நிறத்தில் உள்ள குண்டு பாண்டா ‘பெரிய பாண்டா’ என்ற அர்த்தத்தில் Giant panda என்றே குறிப்பிடப்படுகிறது. பாண்டாவின் அறிவியல் பெயர் Ailuropoda melanoleuca என்பதாகும். நாம் தமிழில் ‘பாண்டா கரடி’ என்று குறிப்பிடுகிறோம்.

என்னது, கரடியா? ஆம், பாண்டா கரடி இனத்தைச் சேர்ந்தது. ஆனால் மற்றக் கரடிகளிலிருந்து சற்று மாறுபட்டது. எப்படி தெரியுமா? இது ஊனுண்ணி என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் தாவரங்களையே விரும்பித் தின்னும். அதுவும் மூங்கில் என்றால் பாண்டாவுக்கு மிகவும் விருப்பம். மூங்கில் இலைகள், துளிர், குருத்து என எல்லாப் பாகங்களையும் விரும்பித் தின்னும். பாண்டாக்கள் 25 வகையான மூங்கில் இலைகளை விரும்பித் தின்கின்றனவாம். குழந்தைகளைப் போல பாண்டாக்கள் தரையில் காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு முன்னங்கால்களை கைகளைப் போலப் பயன்படுத்தி மூங்கில் குருத்துகளைப் பிடித்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்தால் அழகாக இருக்கும். மூங்கில் இலைகளைத் தின்பதால் பாண்டாவை ‘தாவர உண்ணி’ என்று எண்ணிவிடக்கூடாது. பழம், புல், கிழங்கு, தேன், மீன், முட்டை இவற்றோடு பறவை, எலி போன்ற சிற்றுயிர்களையும் தின்னும்.

பொதுவாக கரடிகள் குளிர்காலத்துக்கு முன்பு போதிய கொழுப்பை உடலில் சேமித்துவைத்துக்கொண்டு குளிர்கால உறக்கத்துக்குப் போகும். பெருமளவு மூங்கில் இலைகளையும் மூங்கில் குருத்துகளையும் தின்பதால் இவற்றின் உடலில் கொழுப்பு சேர்வதில்லை. பாண்டாவுக்கு கொழுப்பு சேர வழி இல்லாததால் நீண்ட உறக்கத்துக்கும் வழி இல்லை.  

சுமார் 150 கிலோ எடையுள்ள பாண்டா ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு சுமார் 15 – 30 கிலோ மூங்கில் துளிர்களைத் தின்னும். சாப்பிடுவதும் தூங்குவதும்தான் இவற்றின் வேலை.

பாண்டாக்களால் மரம் ஏற முடியும். நன்றாக நீந்தவும் முடியும். பாண்டாக்கள் மரக்கிளைகளில் தூங்குவதை விரும்பும்.

பாண்டா குட்டி பிறக்கும்போது ரோமங்கள் அற்று ரோஸ் நிறத்தில் இருக்கும். வளர வளரத்தான் ரோமம் முளைக்கும். அம்மா பாண்டா குட்டியை மனிதர்களைப் போல மார்போடு அணைத்தபடி வைத்துக்கொள்ளும். பாண்டாக்கள் விதம் விதமாக ஒலியெழுப்பக்கூடியவை.

பாண்டாவின் தாயகம் சீனா. சீனாவின் தேசிய அடையாளங்களுள் பாண்டாவும் ஒன்று. பண்டைய சீனாவில் உள்நாட்டுப் போர்களின் போது, போரை நிறுத்தக் காட்டப்படும் சமாதானக்கொடியில் பாண்டாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததாம்.

WWF (World Wildlife Fund) எனப்படும் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் லோகோவில் பாண்டா இடம்பெற்றுள்ளது.

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டின் ஐந்து அடையாளச் சின்னங்களுள் ‘ஜிங்ஜிங்’ என்ற பாண்டாவும் ஒன்று. பாண்டாவை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான சித்திரக்கதைகளும் கார்ட்டூன்களும் இதுவரை வெளியாகியுள்ளன. 

என்ன சுட்டிகளே, பாண்டா பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கு பற்றித் தெரிந்துகொள்வோம். காத்திருங்க.

(படம் உதவி – Pixabay)

Share this: