ஃப்ரிகேட் பறவை

Frigate bird

பறவைகள் பல விதம் – 11

வணக்கம் சுட்டிகளே. படத்தில் இருக்கும் இந்தப் பறவையைப் பார்த்தால் கழுத்தில் பலூனைக் கட்டிவிட்டது போல வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? இதன் பெயர் ஃப்ரிகேட் பறவை. ஆண் பறவைகளின் கழுத்துப் பகுதியில் பளீர் சிவப்பு நிறத்தில் சுருங்கிய பலூனைப் போல ஒரு காற்றுப்பை இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் பெண் பறவைகளைக் கவர்வதற்காக ஆண் பறவைகள் அந்தக் காற்றுப் பைக்குள் காற்றை நிரப்பி அழகான பலூனைப் போல ஆக்கும். ஒரு தடவை காற்றுப்பையை நிரப்புவதற்கு அப்பறவைக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகுமாம். அதன் பிறகு என்ன? தன் அழகையும் திறமையையும் காட்டி பெண் பறவைகளைக் கவர்வதுதான் வேலை.

படத்தில் இருக்கும் ஃப்ரிகேட் பறவை Magnificent Frigatebird ஆகும். ஃப்ரிகேட் பறவை இனத்திலேயே மிகவும் அழகான பறவை என்பதால் இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது. இவை கலபகாஸ் தீவிலும் மத்திய அமெரிக்காவிலும் மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளின் கடற்கரைப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

கடற்பறவையான இதற்கு மற்ற நீர்ப் பறவைகளைப் போலவே சவ்வுப்பாதம் உண்டு. ஆனால் இறக்கைகளில் எண்ணெய்ப்பசை கிடையாது தண்ணீரில் இறங்கினால் இறக்கைகள் நனைந்து கனமாகிவிடும். மீண்டும் மேலெழும்பிப் பறப்பது கடினம். ஆனால் தண்ணீரில் இறங்காமல் கடற்பரப்புக்கு மேல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறக்கமுடியும். பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே இவை தென்படும். மீன், சிப்பி, ஜெல்லி மீன், கணவாய் போன்றவை இவற்றின் இரையாகும்.

இந்தப் பறவைக்கு ஃப்ரிகேட் பறவை அதாவது போர்க்கப்பல் பறவை என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? மற்ற கடற்பறவைகள் கடலில் கஷ்டப்பட்டு மீனைப் பிடித்து விழுங்கிவிட்டு கரைக்குத் திரும்பும்போது இந்த ஃப்ரிகேட் பறவைகள் தங்கள் வேலையைக் காட்டும். போர்விமானங்களைப் போல சீற்றத்துடன் அவற்றைத் தாக்கத் தொடங்கும். பெரும்பாலும் தங்களுடைய வலிமையான கொக்கி போன்ற அலகால் அப்பறவைகளின் வாலிறகைக் குறிவைத்துத் தாக்கும். வலி தாங்கமுடியாமல் பறவைகள் தாங்கள் சற்றுமுன்பு விழுங்கிய இரையைக் கக்கும். சட்டென்று பறவையை விட்டுவிட்டு இரையைக் கைப்பற்றி விழுங்கிவிடும் இந்த ஃப்ரிகேட் பறவைகள்.

இப்படி அடாவடித்தனமாகத் திருடித் தின்பதில் கில்லாடிகள் இவை. இதற்கானப் பயிற்சியை இப்பறவைகள் இளம்பருவத்திலேயே ஆரம்பித்துவிடுகின்றன. சில இளம் பறவைகள் தங்கள் அலகில் ஏதாவது குச்சியைக் கவ்வியபடி பறக்கும். குச்சி கீழே விழும்வரை மற்றவை அவற்றைத் துரத்தும். குச்சி கீழே விழுந்துவிட்டால் வேகமாய் சீறிச்சென்று அந்தக் குச்சியைக் கைப்பற்றும். இதை ஒரு விளையாட்டு போலவே அவை பயிலும். மிகவும் மூர்க்க குணம் கொண்ட இப்பறவையை போர்க்கப்பல் பறவை என்று குறிப்பிடுவதை விடவும் போர்விமானப் பறவை என்று குறிப்பிட்டால்தான் பொருத்தமாக இருக்கும். இது இறக்கையை விரித்தால் எட்டு அடி நீளம் இருக்கும். இது சராசரி மனிதனின் உயரத்தை விடவும் மிக அதிகம்.

ஃப்ரிகேட் பறவைகள் புதர்கள், தாழ்வான மரங்கள் போன்றவற்றில் கூடு கட்டும். பெண் பறவை கூடு கட்டும். அதற்கான குச்சிகளை ஆண் பறவை கொண்டுவந்து கொடுக்கும். சில சமயம் தானே தேடி எடுத்துவரும். பல சமயம் மற்ற ஃப்ரிகேட் பறவைகள் கட்டும் கூட்டிலிருந்து திருடி எடுத்து வரும். 13 நாட்களில் கூடு கட்டப்படும். ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகள் இடும். ஆண் பெண் இரண்டும் மாறி மாறி அடைகாக்கும். ஆறு மாதங்கள் வரை குஞ்சுகள் கூட்டில் வசிக்கும். அதன் பிறகு சில மாதங்களுக்கு தாய்ப்பறவையோடு சேர்ந்திருக்கும். இதன் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்கள்.

சுட்டிகளே, அதிசயமான ஃப்ரிகேட் பறவை பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி – Pixabay)

Share this: