பறவைகள் பல விதம் – 10
வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ளவிருக்கும் பறவை பூநாரை. ஆங்கிலத்தில் Flamingo என்று சொல்லப்படுகிறது. போர்த்துக்கீசிய மொழியில் அதற்கு ‘நெருப்பு நிறத்தில் இருப்பது’ என்று அர்த்தம். பெரும்பாலும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இவற்றுக்கு அப்பெயர் பொருத்தம்தானே?
பூநாரை கரையோரப் பறவையினத்தைச் சேர்ந்தது. ஏதுவான தட்பவெப்ப நிலை இருந்தால் அவை பெரும்பாலும் ஒரே இடத்தில் வாழ்கின்றன. தட்பவெப்பம் சாதகமாக இல்லாத சூழலில் உள்நாட்டுக்குள்ளோ அயல் நாடுகளுக்கோ வலசை செல்கின்றன.
பூநாரைகளுள் ஆறு வகைகள் உள்ளன. இந்தியாவில் Greater flamingo எனப்படும் பெரிய பூநாரைகளையும் Lesser flamingo எனப்படும் சிறிய பூநாரைகளையும் பெரிதும் காணமுடியும்.
கட்ச் வளைகுடாப் பகுதி ‘பூநாரைகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பூநாரைகள் கூடு கட்டி குஞ்சு பொரிக்கின்றன. தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை, பழவேற்காடு ஏரி, வேடந்தாங்கல் ஏரி, கோடியக்கரை, கூந்தன்குளம் போன்ற பல பறவைகள் சரணாலயங்களிலும் ராமநாதபுரம் வாலிநோக்கம் உப்பளங்கள், கன்னியாகுமரி மணக்குடி உப்பளங்கள் போன்ற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் அவற்றைக் காணமுடியும்.
பூநாரைகளின் அலகுகள் விநோதமானவை. இவை தண்ணீருக்குள் அலகைத் தலைகீழாக விட்டு இரை தேடும். தண்ணீரை அரித்து அதிலிருக்கும் நத்தை, சிப்பி, நண்டு, மீன், புழு, பூச்சி போன்றவற்றைப் பிடிப்பதற்கு ஏதுவாக இவற்றின் அலகு அரிகரண்டி போல அமைந்திருக்கும். நீர்நிலையில் வாழும் உயிரினங்கள் தவிர, தண்ணீர்த் தாவரங்கள், பாசி, இலைகள், துளிர்கள் போன்றவையும் பூநாரைகளின் உணவாகும்.
முட்டையிடும் காலத்தில் பூநாரைகள் தாங்கள் வாழும் நீர்நிலைகளை ஒட்டியப் பகுதிகளில் சேற்றினால் கிண்ணம் போன்ற பெரிய கூட்டைக் கட்டுகின்றன. இவை வருடத்துக்கு ஒரே ஒரு முட்டைதான் இடும். ஆண் பெண் இரண்டும் மாறி மாறி அடைகாக்கும். ஒரு மாதத்துக்குப் பிறகு குஞ்சு பொரிந்துவரும். குஞ்சுகள் ஆரம்பத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படும்.
பூநாரைகள் தங்கள் குஞ்சுகளுக்குப் பாலூட்டி வளர்க்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? புறா, பெங்குயின், பூநாரை போன்ற சில பறவையினங்களுள் மட்டும் இப்பழக்கம் உள்ளது. குஞ்சுகள் பொரிந்து வந்ததும் தாய் மற்றும் தந்தைப் பறவைகளின் தொண்டைப்பகுதியில் பால் போன்ற திரவம் சுரக்கும். அதற்கு crop milk என்று பெயர். சற்றுக் கெட்டியாகவும் ஊட்டச்சத்து மிகுந்தும் இருக்கும் அப்பாலை அவை தம் குஞ்சுகளுக்கு முதல் உணவாக ஊட்டுகின்றன.

பூநாரைகளின் பால், அவை உண்ணும் உணவின் தன்மையால் சிவப்பு நிறத்தில் காணப்படும். பூநாரைகள் தங்கள் குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுவதைப் பார்ப்பவர்கள், அவை தங்கள் இரத்தத்தையே ஊட்டுவதாக தவறாக நினைத்துவிடுகிறார்கள். உண்மையில் அது பால்தான்.
இரண்டு மாதங்களுக்கு பெற்றோர்களிடம் பால் குடித்து வளரும் பூநாரைக் குஞ்சுகள் அதன் பிறகு நீருக்குள் இறங்கி இரைதேடப் பழகும்.
பூநாரைகளின் ஆயுட்காலம் சுமார் 30 முதல் 40 வருடங்கள் வரை இருக்கும். காப்பகங்களில் 60 ஆண்டுகள் வரை உயிர்வாழும். 1933 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் உயிர்க்காட்சி சாலைக்கு ஒரு பெரிய பூநாரை (Greater flamingo) கொண்டுவரப்பட்டது. அப்போதே அது நன்கு வளர்ந்த பறவையாக இருந்ததாம். 81 வருடங்களுக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு அதன் வயோதிகம் காரணமாக கருணைக்கொலை செய்யப்பட்டதாம். அதுவே உலகில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த பூநாரை என்ற பெருமைக்குரியதாக இன்று வரை உள்ளது.
சுட்டிகளே, அழகிய பூநாரைகளைப் பற்றி அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு அரிய பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(படங்கள் உதவி – Pixabay)