மரகதப்புறா

Emeraldpigeon_pic

பறவைகள் பல விதம் – 15

வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கும் பறவை எது தெரியுமா? மரகதப்புறா. பச்சை நிறச் சிறகுகளைக் கொண்டிருப்பதால் பச்சைப்புறா, பச்சைச்சிறகுப் புறா என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் ‘மரகதப்புறா’ என்று அழகிய பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் அதே பொருளுடைய ‘Emerald dove’ என்று குறிப்பிடப்படுகிறது. இதன் உயிரியல் பெயர் Chalcophaps indica. இவற்றுள் ஆறு துணைப்பிரிவுகள் உள்ளன. இவை இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மரகதப்புறாதான் தமிழ்நாட்டின் மாநிலப்பறவை என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநிலப் பறவை உண்டு. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா. மரகதப்புறாக்கள் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.

மரகதப்புறாக்கள் ஜோடியாகவோ, சிறு குழுவாகவோ காணப்படும். இவை பகல் பொழுது முழுவதும் தரையில் மேய்ந்துகொண்டிருக்கும். மரங்களிலிருந்து உதிர்ந்து கீழே விழுந்துகிடக்கும் பழங்கள், விதைகள், தானியங்கள் போன்றவற்றைத் தின்னும். ஏதாவது ஆபத்து நெருங்கி வருவதாக உணர்ந்தால் மற்றப் புறாக்களைப் போல பறக்காது. ஓடவே முயற்சி செய்யும். பறப்பதை விடவும் ஓடிப்போய் புதர் மறைவில் ஒளிந்துகொள்வதே அதற்கு எளிதாக இருக்கும். இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்புக்காக, உயரமான மரக்கிளையில் அமர்ந்து தூங்கும்.

ஆண் மரகதப்புறாவுக்கு தோள்பட்டையில் வெள்ளை நிறத் தீற்றலும் உச்சியில் சாம்பல் நிறமும் காணப்படும். பெண் மரகதப்புறாவுக்கு அவை கிடையாது. முதிர்ச்சி அடைந்த பறவைகளில் ஆண் பெண் வேறுபாட்டை எளிதில் அறிந்துகொள்ள முடியும். இவற்றின் அலகு சிவப்பு நிறத்தில் இருக்கும். 

மரகதப் புறாக்கள் அடர்ந்த காடுகள், மழைக்காடுகள், வயல்வெளிகள், சதுப்பு நிலக்காடுகள் என அவற்றின் வாழும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபட்ட நில அமைப்பில் வசிக்கும்.

மரகதப்புறாக்கள் இனப்பெருக்கக் காலத்தில் உயரமான மரக்கிளையில் கூடு கட்டி முட்டையிடும். இவற்றின் கூடு ஒழுங்கற்ற வடிவில் இருக்கும். இவை ஒரு தடவைக்கு இரண்டு முட்டைகள் இடும்.

 மற்ற புறா இனங்களைப் போலவே இவையும் தங்கள் குஞ்சுகளுக்குப் பால் கொடுக்கும். என்ன, புறா பால் கொடுக்குமா? புறா ஒரு பறவையாச்சே என்று ஆச்சர்யப்படுவீர்கள். ஏற்கனவே பூநாரை என்ற பறவையைப் பற்றிச் சொல்லும்போது சில பறவைகள் தங்கள் தொண்டைப்பகுதியில் சுரக்கும் பால் போன்ற திரவத்தைக் குஞ்சுகளுக்கு ஊட்டும் என்று சொல்லியிருக்கிறேன், நினைவிருக்கிறதா, சுட்டிகளே? அதற்கு crop milk என்று பெயர். அம்மா, அப்பா இரண்டு புறாக்களுமே தங்கள் குஞ்சுகளுக்கு ‘தொண்டைப் பால்’ ஊட்டும்.

மூன்று வாரங்கள் வரை கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த பாலைக் குடித்து வளரும் குஞ்சுகள், சற்று வளர்ந்த பிறகு பெற்றோருடன் சேர்ந்து இரைதேடப் போகும்.

சுட்டிகளே, தமிழ்நாட்டின் மாநிலப் பறவையான மரகதப்புறா பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவை பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.  

(Pc – Pixabay)

Share this: