எக்கிட்னா

echidna

விநோத விலங்குகள் – 10

வணக்கம் சுட்டிகளே. படத்தில் முட்களுடன் காணப்படும் விலங்கின் பெயர் என்ன தெரியுமா? முள்ளம்பன்றி அல்லது முள்ளெலி என்று சொல்வீங்க. தவறு. இதன் பெயர் எக்கிட்னா. குழப்பமாக இருக்கிறதா? தெளிவாகவே சொல்கிறேன் கேளுங்க. எக்கிட்னா ஆஸ்திரேலியாவிலும் அதைச் சுற்றியுள்ள தீவுகளிலும் மட்டுமே காணப்படும் ஒரு விநோத விலங்கு ஆகும். இது பல வகையிலும் முள்ளம்பன்றியிலிருந்தும் முள்ளெலியிலிருந்தும் வேறுபட்டது.

Porcupine எனப்படும் முள்ளம்பன்றியும் Hedgehog எனப்படும் முள்ளெலியும் குட்டிப் போட்டுப் பாலூட்டும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. ஆனால் எக்கிட்னா முட்டையிட்டு அடைகாத்து அதிலிருந்து வெளிவரும் குட்டிக்குப் பாலூட்டும் ஒரு விலங்கினம் ஆகும்.

முட்டையிட்டுப் பாலூட்டும் மோனோட்ரீம் என்னும் இனத்துள் தற்போது உலகில் எஞ்சி இருப்பவை இந்த எக்கிட்னாவும் பிளாட்டிபஸ் என்னும் விலங்கும் மட்டும்தான். இரண்டுமே ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன.

எக்கிட்னாக்களுள் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று நீள அலகு எக்கிட்னா, மற்றொன்று குட்டை அலகு எக்கிட்னா. அவற்றின் வாய் பறவைகளுக்கு இருப்பதைப் போல கூராக இருப்பதால் beak என்றே சொல்லப்படுகிறது. எக்கிட்னாவின் முதன்மை உணவு எறும்புகளும் கரையான்களும்தான். சில சமயங்களில் புழு பூச்சிகளையும் தின்னும். சுமார் 18 செ.மீ. நீளமுள்ள பசையுள்ள நாக்கைக் கரையான் புற்றுக்குள் நுழைத்து அவற்றைத் தின்னும். எக்கிட்னா ஒரு நிமிடத்துக்கு நூறு முறை நாக்கை நீட்டி உள்ளிழுக்குமாம். அப்படியென்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு கரையான்களை கபளீகரம் செய்யும் என்று யோசித்துப் பாருங்க. 

எக்கிட்னாவுக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. பெரும்பாலான ஆஸ்திரேலிய விலங்குகளைப் போல இதற்கும் வயிற்றில் பை உண்டு. ஆனால் நிரந்தரமான பை கிடையாது. முட்டையிடும் சமயத்தில் மட்டும் ஒரு தற்காலிகப் பை உருவாகும். இதன் முட்டை குட்டித் திராட்சை அளவில் இருக்கும். ஓடு கடினமாக இல்லாமல் தோல் போல இருக்கும். அந்த முட்டையை தன் வயிற்றுப் பைக்குள் வைத்து அடைகாக்கும். 10 நாட்களுக்குப் பிறகு குட்டி வெளியில் வரும். அப்போது அது ஒரு புழுவைப் போலத்தான் இருக்கும். உடம்பில் முட்கள் வளர்ந்திருக்காது. ஆனால் ஒரே ஒரு பல் இருக்கும். அந்தப் பல்லைக் கொண்டுதான் முட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். அதற்குப் பிறகு அதன் வாழ்நாளில் பல் தேவைப்படாது என்பதால் மறுநாளே அந்தப் பல் விழுந்துவிடும். இரண்டு மாத காலத்துக்கு அம்மாவின் வயிற்றுப்பைக்குள் இருந்தபடி பாலைக் குடித்துக்கொண்டு குட்டி வளரும். அதன் உடலில்  முள் வளர ஆரம்பித்தவுடன் அம்மா ஒரு வளை தோண்டி அதற்குள் குட்டியை விட்டுவிட்டு இரைதேடப் போகும். எக்கிட்னாவின் முள் என்பது அதன் ரோமம்தான்.

வளை தோண்டுவதற்கு வசதியாக எக்கிட்னாவுக்கு வலிமையான கால்களும் கூர்மையான நகங்களும் இருக்கும். அதன் பின்னங்கால்கள் சற்றே வளைந்திருப்பதால் நடக்கும்போது தள்ளாடுவதுபோல இருக்கும்.  ஆனால் நன்றாக நீந்தும். ஆபத்து சமயத்தில் முள்ளம்பன்றியைப் போலவே தன் உடலை பந்துபோல சுருட்டி எதிரிகளிடமிருந்து தப்பிக்கும்.

ஆஸ்திரேலியாவின் ஐந்து சென்ட் நாணயத்தில் எக்கிட்னா உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் மூன்று அடையாளச் சின்னங்களுள் மில்லீ என்னும் எக்கிட்னாவும் ஒன்று.

சுட்டிகளே, இந்த மாதம் எக்கிட்னா என்ற ஆஸ்திரேலியாவின் விநோத விலங்கைப் பற்றி அறிந்துகொண்டீர்கள். அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கு பற்றிப் பார்க்கலாம்.      

(படங்கள் – கீதா)

Share this: