டிராகுலா கிளி

டிராகுலா கிளி

பறவைகள் பல விதம் – 18

வணக்கம் சுட்டிகளே. ‘டிராகுலா’ என்றால் ‘இரத்தக் காட்டேறி’ ‘இரத்தம் குடிக்கும் பேய்’ என்றெல்லாம் கதைகளில் கேட்டிருப்பீர்கள். ‘டிராகுலா கிளி’ என்ற பெயரைக் கேட்டதும் இந்தக் கிளியும் இரத்தம் குடிக்குமோ என்று நினைத்து ஆச்சர்யம் அடைவீங்க. அதுதான் கிடையாது. இது முழுக்க முழுக்க பழங்களை மட்டுமே தின்று வாழும் கிளி இனம்தான்.

கருப்பு மற்றும் பளீர் சிவப்பு நிறத்தில் டிராகுலாவின் உடையைப் போன்றே இதன் நிறமும் இருப்பதால் ‘டிராகுலா கிளி’ (Dracula parrot) என்றும், நீண்டு வளைந்த அலகுடன், முகத்தில் இறகுகள் அற்று, பார்ப்பதற்கு வல்லூறு போன்ற தோற்றம் அளிப்பதால் ‘வல்லூறு கிளி’ (Vulturine parrot) என்றும் காரணப்பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு ‘பெஸ்கட்டின் கிளி’ (Pesquet’s parrot) என்ற பொதுப்பெயரும் உண்டு. Psittrichas பேரினத்தைச் சேர்ந்த ஒரே பறவையினம் இதுதான். இதன் உயிரியல் பெயர் Psittrichas fulgidus.  

டிராகுலா கிளிகள் நியூகினியின் மழைக்காடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. இவற்றின் உடல் சுமார் அரை மீட்டர் நீளம் இருக்கும். எடை 700 முதல் 800 கிராம் வரை இருக்கும்.

பழந்தின்னிப் பறவைகளான இவை மழைக்காடுகளின் அனைத்துப் பழங்களையும் தின்னும். இருப்பினும் அத்திப்பழங்கள் இவற்றுக்கு மிகவும் விருப்பமானவை. பழங்கள் தவிர, சோளம், கேரட், பீட்ரூட், பட்டாணி போன்ற இனிப்பான காய்களையும் பூந்தேனையும் விரும்பியுண்ணும்.   

மாமிச உண்ணிகளான வல்லூறுகள் மாடு, மான் போன்ற பெருவிலங்குகளின் இறந்த உடலுக்குள் தலையை நுழைத்து மாமிசத்தை உண்ணும். அப்போது இரத்தம், நிணநீர் போன்றவற்றின் பிசுபிசுப்பால்  அவற்றின் முகத்து இறகுகளில் சிடுக்கு விழாமல் இருக்க, அவற்றின் தலை இறகுகளற்று வழுக்கையாக இருக்கும். கழுத்துப் பகுதியில் கூட இறகுகள் காணப்படாது. பரிணாம வளர்ச்சியின் விந்தை அது.

பழந்தின்னிப் பறவைகளான டிராகுலா கிளிகளின் முகமும் வல்லூறைப் போலவே இறகுகள் அற்று இருக்கும். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? பப்பாளி, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களுக்குள் இவை தலையை விட்டுக் குடைந்து தின்னும்போது பழங்களின் கொழகொழப்பும் பிசுபிசுப்பும் முகத்து இறகுகளில் பட்டு அவற்றில் சிடுக்கு விழுந்துவிடும் என்பதாலேயே இவற்றின் முகத்திலும் இறகுகள் இல்லை. இதுவும் பரிணாம வளர்ச்சியின் விந்தைதான். அதே சமயம், பழங்களைத் தின்றுவாழும் வேறு எந்த கிளி இனத்துக்கும் இதுபோன்ற இறகுகளற்ற முகம் காணப்படுவதில்லையே? ஏன்? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.  

டிராகுலா கிளி இனத்தில் ஆண் பெண் இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் ஆண் பறவைகளின் காதுக்குப் பின்னால் சிறிய சிவப்பு நிறப் புள்ளி காணப்படும். அதைக் கொண்டு ஆண் பெண் பேதம் அறியலாம்.

பிற கிளியினங்களைப் போலவே இவையும் மரப்பொந்தில் கூடு அமைத்து இரண்டு முட்டைகளை இடும். குஞ்சுகள் பொரிந்து வந்ததும் தாய் தந்தை இரண்டும் அவற்றுக்கு இரையூட்டி வளர்க்கும். இவற்றின் ஆயுட்காலம் 20 முதல் 40 வருடங்கள்.

டிராகுலா கிளிகள் பார்க்க மட்டுமல்ல, அவற்றின் குரலும் பயங்கரமாக இருக்கும். தகர டப்பாவைத் தரையில் தேய்ப்பதைப் போன்ற கரகரவென்ற சத்தம் எரிச்சலூட்டுவதாக இருக்கும். சில சமயம் விலங்குகள் உறுமுவது போன்றும் உறுமல் ஒலி எழுப்பும். அதனால் இந்தக் கிளியை யாரும் செல்லப்பறவையாக வீட்டில் வளர்க்க விரும்புவதில்லை. ஆனால் இவற்றின் அழகிய இறகுகளுக்கு சந்தையில் மதிப்பு அதிகம்.

அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகள், தொப்பி போன்றவற்றின் வடிவமைப்பில் இறகுகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் இறகுகள் பெரும் விலை கொடுத்து வாங்கப்படுவதால் டிராகுலா கிளிகள் சட்டத்துக்குப் புறம்பாக பெருமளவு வேட்டையாடப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதால் இவை அழிவாய்ப்புள்ள இனமாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.   

சுட்டிகளே, அதிசயமான டிராகுலா கிளியைப் பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி – Pixabay & wikimedia commons)

Share this: