உலகின் மிக உயரமான மரம்

செம்மரம்

மரம் மண்ணின் வரம் – 17

வணக்கம் சுட்டிகளே. உலகிலேயே மிக உயரமான மரம் எது தெரியுமா? கலிஃபோர்னியாவில் உள்ள தேசிய செம்மரப் பூங்காவில் உள்ள ‘Hyperion’ என்ற பெயருடைய செம்மரம்தான். 2006-ஆம் ஆண்டுதான் இதன் இருப்பு கண்டறியப்பட்டது. அதன் தற்போதைய உயரம் 116.07 மீட்டர் ஆகும். அதன் வயது சுமார் 700 முதல் 800 வரை இருக்கலாம் என்று ஆய்வுகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது. மரக்கடத்தல்காரர்களால் மரத்துக்கு சேதம் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் மரத்தின் துல்லியமான இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எந்த வழியிலாவது கண்டுபிடித்து மரத்தின் இருப்பிடத்தை நெருங்குபவர்க்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் சுமார் ஐயாயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் நான்கு லட்ச ரூபாய்) அபராதமும் விதிக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மர வகையிலேயே மிக உயரமாக வளரக்கூடியவை மற்றும் மிகப் பழமையானவை என்ற சிறப்பு கலிபோர்னியா செம்மரங்களுக்கு உண்டு. சுமார் 20 கோடி ஆண்டுகளாக, அதாவது டைனோசார்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே பூமியில் நிலைபெற்றிருக்கும் மரங்கள் இவை. இம்மரத்தின் பட்டைகள், மதில் சுவரை விடவும் தடிமனாக இருக்கும்.

கலிபோர்னியா செம்மரங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்குமேல் வாழக்கூடியவை. ஒவ்வொரு மரமும் சுமார் 300 அடிக்கு மேல் வளரக்கூடியது. சுட்டிகளே, உங்களுக்குப் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் 37 மாடிக் கட்டடம் அளவுக்கு உயரமானது. கீழே இருக்கும் படத்தைப் பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.

கலிபோர்னியா செம்மரம் ஆங்கிலத்தில் coast redwood எனப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் sequoia sempervirens என்பதாகும். மரமும் பட்டைகளும் அரக்கு நிறத்தில் காணப்படுவதால் இது ‘செம்மரம்’ என்று சொல்லப்படுகிறது. உண்மையில் இவை ஊசியிலை மரவகையைச் சேர்ந்தவை. இவற்றின் கூம்பு வடிவ விதையடுக்குகள் ஒரு அங்குல நீளமே இருக்கும். ஒவ்வொரு விதையடுக்கிலும் சுமார் 100 – 150 குட்டி விதைகள் இருக்கும்.

பொதுவாக, தமிழில் நாம் செம்மரம் எனக் குறிப்பிடுவது, Red sandalwood (Pterocarpus santalinus) எனப்படும் செஞ்சந்தன மரத்தைக் குறிக்கும். சுட்டிகளே, அந்த மரத்தைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகச் சொல்கிறேன். இப்போது கலிபோர்னியா செம்மரத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

1850-ஆம் ஆண்டுக்கு முன்பு கலிபோர்னியா கடற்கரையை ஒட்டி சுமார் இருபது இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கலிபோர்னியா செம்மரக்காடு பரவியிருந்தது. கலிபோர்னிய மண்ணில் தங்கத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சுரங்கம் தோண்டுவதற்காக செம்மரக்காடு பெருமளவு அழிக்கப்பட்டது. இப்போது அங்கும் இங்கும் துண்டுதுண்டாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் அதாவது முன்பு இருந்ததில் ஐந்து சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளது.

மழைக்காலத்தில் மரத்துக்குத் தேவையான நீர் மழையின் மூலம் கிடைத்துவிடும். ஆனால் வெயில் காலத்தில் என்ன செய்வது? அப்போது இம்மரங்கள் அருமையான ஒரு உத்தியைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொரு மரமும் கடற்கரைக் காற்றின் ஈரப்பதத்தை, ஊசி போன்ற இலைகளில் சேகரித்துக் குளிரவைத்து நீராக மாற்றுகிறது. பிறகு மழைத்துளி போல சொட்டுச் சொட்டாக அவற்றைக் கீழே சிந்துகிறது. மண்ணில் இறங்கும் நீரை வேர்கள் உறிஞ்சிக்கொண்டு மரத்தைக் காப்பாற்றுகின்றன. எவ்வளவு அறிவு பாருங்கள்.

சுட்டிகளே, உலகின் மிக உயரமான மரம் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு சிறப்பான மரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். தயாராய் இருங்க.   

(படங்கள் உதவி – Pixabay)

Share this: