சவுக்கு மரம்

casuarina

மரம் மண்ணின் வரம் – 12

ஊசி போல இலை இருக்கும், உத்திராட்சம் போல காய் காய்க்கும். அது என்ன?

இந்த விடுகதைக்கு விடை தெரியுமா சுட்டிகளே? அதுதான் சவுக்கு மரம். இந்த மாதம் சுட்டி உலகத்தில் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கும் மரமும் இதுதான்.

நீங்கள் உங்கள் வீடுகளிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பல இடங்களில் அடிக்கடி பார்க்கும் இந்த மரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா? வாங்க, தெரிந்துகொள்ளலாம்.

சவுக்கு மரம் ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினி  மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா போன்றவற்றைத் தாயகமாகக் கொண்டது. அதன் பயன்பாடு காரணமாக உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவலாக அறிமுகமாகியுள்ளது. இன்று சவுக்கு மரச் சாகுபடி உலக அளவில் பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது.

சவுக்கு மரத்தின் காய்கள் உருண்டையாகவும் கரடுமுரடாகவும் இருக்கும். அதனால்தான் விடுகதையில் ருத்திராட்சம் போல் காய் காய்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு கிலோ எடையில் ஐந்து அல்லது ஆறு லட்சம் விதைகள் இருக்குமாம். அவ்வளவையும் விதைத்தால் இரண்டு லட்சம் கன்றுகளாவது வளர்ந்து ஐந்து வருடத்தில் நல்ல பலனைக் கொடுக்கும் என்கிறார்கள் சவுக்கு மர விவசாயிகள்.   

சவுக்கு மரம் என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா? அதன் இலைகள் சவுக்கு போல அதாவது சாட்டை போல இருப்பதால்தான். இந்த மரம் ஓக் மரத்தைப் போல உறுதியானதாக இருப்பதால் இதற்கு ஆங்கிலேயர் இட்ட பெயர் ஷீ-ஓக் (She-oak). எனவே ஷீ-ஓக் என்பது மருவி ‘சவுக்கு’ ஆகியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. இதன் அறிவியல் பெயரான Casuarina என்பதற்கும் ஒரு காரணக்கதை உள்ளது. பறவைகள் பல விதம் தொடரில் சில மாதங்களுக்கு முன்பு Cassowary என்ற பறக்கமுடியாத பறவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். சவுக்கு மரத்தின் கிளைகளில் கொத்துக்கொத்தாகத் தொங்கும் குச்சி போன்ற இலைகள் காசோவரி பறவையின் இறகுகளைப் போலத் தோன்றுவதால் இம்மரத்துக்கு ‘காசுவரினா’ என்ற அறிவியல் பெயர் இடப்பட்டுள்ளது.    

சவுக்கு மரத்தில் ஆண் மரம் பெண் மரம் என இரண்டு வகை உண்டு. ஆண் மரத்தில் பூக்கள் பூக்கும். காய் காய்க்காது. பெண் மரங்கள் பூத்துப் பிறகு காய்க்கும். ஆண் பூக்களும் பெண் பூக்களும் வடிவத்தில் வித்தியாசமாக இருக்கும். பூக்கும் பருவத்தில் ஆண் மரம் எது, பெண் மரம் எது என எளிதாகக் கண்டறிய முடியும். இவற்றில் காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

பந்தல் போடவும் கட்டடம் கட்டும்போது சாரம் அமைக்கவும் பெரும்பாலும் சவுக்கு மரக்கட்டைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ஏன் தெரியுமா? சவுக்கு மரக்கட்டைகள் நீளமாகவும், கிளைகளற்று ஒரே சீராகவும், உருண்டையாகவும், உறுதியாகவும் இருப்பதுதான் காரணம். கொடிக்கம்பம், மின்கம்பம், பாய்மரக் கம்பம், கட்டுமரம், துடுப்பு, கைப்பிடி, சக்கரம் போன்று பலவற்றைத் தயாரிக்கவும் இம்மரம் பயன்படுகிறது. சவுக்கு மரத்தின் கூழ் காகிதம், நூல் இழை போன்றவற்றைத் தயாரிக்கவும், காய்ந்த மரக்கட்டைகள் சிறந்த எரிபொருளாகவும் பயன்படுகின்றன. மேலும் கடலோர மணற்பாங்கானப் பகுதிகளில் காற்றுத் தடுப்பானாகவும் மண்சரிவைத் தடுத்து நிறுத்தவும் கடற்கரையோரங்களில் பெருமளவு பயிரிடப்படுகின்றன.

சவுக்கு மரம் 35-40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆயுட்காலம் சுமார் 50 வருடங்கள்.

சுட்டிகளே, சவுக்கு மரம் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு மரத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.

(படம் உதவி – Pixabay)

Share this: