திருவோட்டு மரம்

Thiruvottu maram

மரம் மண்ணின் வரம் – 9

வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கும் மரம் திருவோட்டு மரம். ஆங்கிலத்தில் Calabash tree எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் முதிர்ந்த காய்தான் திருவோடு என்ற பிச்சைப் பாத்திரம் செய்யப் பயன்படுகிறது. Beggar’s bowl tree என்றும் இது சொல்லப்படுகிறது. பெரும்பாலும் கோவில் வாசலில் அமர்ந்து யாசகம் கேட்கும் துறவிகளின் கையில் இந்தத் திருவோடு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். திரு + ஓடு என்பதுதான் திருவோடு என்று சொல்லப்படுகிறது.

திருவோட்டு மரத்தின் அறிவியல் பெயர்   Crescentia cujete. தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் அதன் பயன்பாடு காரணமாக உலகின் பல நாடுகளுக்கும் அறிமுகமானது. அப்படிதான் இந்தியாவிலும் அறிமுகமாகி தற்போது பல இடங்களிலும் பரவியுள்ளது.

திருவோட்டு மரம் சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் கிளைகள் பக்கவாட்டில் நீண்டு பரந்து காணப்படும். இதன் பூக்கள் கிளைகளில் அல்லாமல் மரத்தின் கனமான தண்டுகளில் பூக்கும். காய்கள் பூசணிக்காய்களைப் போல இருக்கும். ஒவ்வொரு காயும் சுமார் 50 செ.மீ. குறுக்களவுடன் பெரியதாக இருக்கும். கிளைகளில் காய்த்தால் காய்களின் கனம் தாங்காமல் கிளைகள் முறிந்துவிடும் அல்லவா? அதனால்தான் கனமான பெரும் தண்டுகளில் பூத்துக் காய்க்கின்றன. பலா மரம் நினைவுக்கு வருகிறதா சுட்டிகளே? பலா மரத்திலும் இப்படிதான் காய்கள் கிளையில் காய்க்காமல் தண்டிலும் வேரிலும் காய்க்கும்.

திருவோட்டுக் காய்கள் முற்றிய பிறகு பறிக்கப்படுகின்றன. உள்ளே இருக்கும் சதைப்பத்தான பகுதி உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. திருவோட்டுக் காயின் மேல் ஓடு தடிமனாகவும் கடினமானதாகவும் இருக்கும். அதை ரம்பம் வைத்துதான் அறுக்க முடியும்.

மேலோட்டில் இருந்து தண்ணீர்க் குடுவை, கிண்ணம், கரண்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களும், கைப்பை, பெட்டி, அலங்காரப் பொருட்கள், விளக்கு மறைப்புகள் போன்ற கலைநயமிக்கப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சில இசைக்கருவிகளும் தயாரிக்கப்படுகின்றன. முக்கியமாக ‘கலபாஷ்‘ எனப்படும் தாளவாத்திய இசைக்கருவி இதனைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

பண்டைய நாகரிகங்களுள் பிரபலமான மாயன் நாகரிகத்தில் இந்த திருவோட்டுக் காய்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருட்கள் உருவாக்கப்பட்டன என்பது வியப்பளிக்கும் தகவல். சில நாடுகளில் இந்த திருவோட்டுக் கிண்ணங்கள் கடவுளுக்கு உணவு படைக்கும் புனிதக் கிண்ணங்களாகக் கருதப்படுகின்றன.

கென்யா, டான்சானியா, பெர்முடா, நைஜீரியா போன்ற பல நாடுகளின் அஞ்சல் தலைகளில் திருவோட்டுக்காயும் மரமும் இடம்பெற்றுள்ளன.

சுட்டிகளே, திருவோட்டு மரம் பற்றி இன்று அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு அதிசய மரத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

(படங்கள் கீதா மதி)

Share this: