பந்து மரம்

கடம்ப மரம்

மரம் மண்ணின் வரம் – 16

வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயர் கடம்ப மரம். இந்த மரத்தை பூக்கும் பருவத்தில் அதன் பூக்களைக் கொண்டு எளிதில் அடையாளம் காண முடியும். இதன் பூ, மொட்டு யாவும் பந்து வடிவில் இருக்கும். ஒரு குட்டிப் பந்தில் ஆயிரக்கணக்கான மொட்டுகள் இருக்கும். மொட்டுகள் வளர்ந்து பூக்கும்போது பந்து பெரியதாக டென்னில் பந்து அளவில் காணப்படும். ஆயிரக்கணக்கான மொட்டுகளும் ஒரே நேரத்தில் பூக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பூக்கும்.

கடம்ப மரத்தின் பூக்கள் மிகுந்த நறுமணம் உடையவை. பூக்களிலிருந்து அத்தர் எனப்படும் வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது. பூக்களில் தேன் எடுக்க ஏராளமான தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் படையெடுத்து வரும். எல்லாப் பூக்களும் பூத்து முடித்த பிறகு காயாகிப் பின் பழமாகும். கடம்ப மரத்தின் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையோடு இருக்கும். இ பறவைகளும் வௌவால்களும் விரும்பித் தின்கின்றன.

கடம்ப மரத்தின் இலைகள் அளவில் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு இலையும் சுமார் 30 செ.மீ. நீளமும் 15 செ.மீ. அகலமும் இருக்கும். இலைகள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இலைகளைக் கசாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது. கடம்ப மரத்தின் பட்டை, இலை, காய், பூ யாவும் மருத்துவக்குணம் கொண்டவை. சில நாடுகளில் பூ, காய், பழம் போன்றவை உணவாகவும் உட்கொள்ளப்படுகின்றன.  

கடம்ப மரம் பூக்களின் அழகுக்காகவே பல இடங்களில் வளர்க்கப்படுகிறது. விதையிலிருந்து உருவான மரம் ஐந்தாண்டுகளில் பூக்கத் தொடங்கும். மரம் சுமார் நூறு வருடங்களுக்கு மேல் உயிர்வாழும்.  கடம்ப மரத்திலிருந்து மென்மரப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இம்மரத்திலிருந்து காகிதம், காகிதக்கூழ், அட்டைப்பெட்டிகள், பென்சில், தீக்குச்சிகள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.

கடம்ப மரமும் மலர்களும் இந்து மதத்திலும் புத்த மதத்திலும் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்தியப் புராணங்களில் கடம்ப மரம் பெருமளவு இடம்பெற்றுள்ளது. தமிழ்க் கடவுளான முருகனின் பல பெயர்களுள் கடம்பன் என்பதும் ஒன்று.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் தல மரமாக கடம்ப மரம் உள்ளது. தல புராணங்களில் மதுரை ‘கடம்பவனம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.  சங்க இலக்கியப் பாடல்களிலும் கடம்ப மரம் இடம்பெற்றுள்ளது. பெரும்பாணாற்றுப்படையில் புசுபுசுவென்று இருக்கும் காடைக் குஞ்சுகளுக்கு கடம்ப மலர்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

இந்திய மலர்களின் சிறப்பை உணர்த்தும் விதமாக இந்திய அஞ்சல் துறை 1977-ஆம் ஆண்டு தாமரை, செங்காந்தள், ரோடோடென்ட்ரான், கடம்பு ஆகிய நான்கு மலர்களை அஞ்சல் தலைகளாக வெளியிட்டது. மற்ற மலர்களைப் போல மாநில மலராகவோ, தேசிய மலராகவோ இல்லாதபோதும் கடம்பு அந்த வரிசையில் இடம்பெற்றிருப்பதே அதன் சிறப்புக்குச் சான்று. 

கடம்ப மரம் ஆசியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மரமாகும். இம்மரத்தின் உயிரியல் பெயர் Neolamarckia cadamba. ஆங்கிலத்தில் இது Burflower tree, Kadam tree என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. உங்களைப் போன்ற குழந்தைகள் அதை ‘பந்து மரம்’ என்பர். இப்போதுதான் பெயர் தெரிந்துவிட்டதே. இனிமேல் இம்மரத்தை எங்கு பார்த்தாலும் ‘கடம்ப மரம்’ என்று சரியான பெயரைச் சொல்வீர்கள் அல்லவா, சுட்டிகளே?

(படங்கள் உதவி – Pixabay & Wikipedia)

Share this: