பறவைகளைக் கொல்லும் மரம்

birdcatcher tree

மரம் மண்ணின் வரம் – 13

வணக்கம் சுட்டிகளே! மரம் என்றால் பறவைகளுக்கு பழம் கொடுக்கும். உட்கார கிளை கொடுக்கும். கூடு கட்ட இடம் கொடுக்கும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க மறைவான இடம் கொடுக்கும். இரவில் அடைக்கலம் கொடுக்கும். ஆனால் எந்த மரமாவது பறவைகளைக் கொல்லுமா? ஏன் கொல்லும்? எப்படிக் கொல்லும்? என்றெல்லாம் உங்கள் மனதில் கேள்விகள் எழும். இந்த மரத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்

நியூசிலாந்து, நார்ஃபோக் தீவு, ஹவாய், கரீபியன் தீவுகளைச் சேர்ந்த பிசோனியா மரம்தான் ‘பறவைகளைப் பிடிக்கும் மரம், பறவைகளைக் கொல்லும் மரம்’ என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. பிசோனியா பேரினத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்த மரங்களின் கீழே ஏராளமான பறவை எலும்புகளைப் பார்க்கலாம். அண்ணாந்து பார்த்தால் கடற்பறவைகளின் இறந்த உடல்கள் கிளைகளில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அப்படியென்றால் மரம் பறவைகளைக் கொல்வது உண்மைதானா?

சுட்டிகளே, சற்றுப் பொறுங்கள். மற்ற மரங்களைப் போலவே பிசோனியா மரமும் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும். கூடு கட்ட இடம் கொடுக்கும். உண்ணப் பழம் கொடுக்கும். பூக்காத காய்க்காத காலத்தில் இம்மரங்களில் ஏராளமான கடற்பறவைகள் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கின்றன. கீழே விழும் அவற்றின் எச்சத்தை உரமாகக் கொண்டு மரம் தனக்குத் தேவையான சத்துக்களைப் பெற்றுக்கொள்கிறது. கடற்பறவைகள் இல்லை என்றால் பிசோனியா மரமும் இருக்காது என்ற அளவுக்குப் பறவைகளின் எச்சத்தை நம்பியே உயிர்வாழ்கிறது இம்மரம். அதற்கு மாற்றாக, பறவைகளுக்கு நிறைய பழங்களைத் தருகிறது. ஆனால் பிரச்சனையே பழத்தில்தான் உள்ளது.  

பிசோனியாவின் பழங்களும் விதைகளும் பிசுபிசுப்புத்தன்மை நிறைந்தவை. விதைகள் சோம்பு வடிவத்தில் சுமார் ஒரு செ.மீ. நீளத்தில் இருக்கும். அதற்கு ‘பேய் நகம்’ (devil’s claw) என்றே பெயரிடப்பட்டுள்ளது. தச்சர்கள் பலகைகளை ஒட்டுவதற்குப் பயன்படுத்தும் ஃபெவிக்கால் என்னும் இரசாயனப் பசையைப் போலவே வீரியமான ஒட்டும் தன்மையை உடையவை அவ்விதைகள்.

ஆசையோடு பழங்களைத் தின்ன வரும் கடற்பறவைகளின் உடலில் இந்த விதைகள் ஒட்டிக் கொள்ளும். பிறகு பறவை எங்கெல்லாம் பறக்கிறதோ அங்கெல்லாம் கூடவே ஒட்டிக்கொண்டு சென்று இறுதியாக ஏதாவதொரு தீவில் விழுந்து முளைக்கும். விதைபரவலுக்காகவே அம்மரம் பறவை உடலில் ஒட்டிக்கொள்ளும் உத்தியை செயல்படுத்துகிறது. ஆனால் எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்துதான் அல்லவா?

ஒரு பறவையின் உடலில் கொஞ்ச விதைகள் ஒட்டினால் பிரச்சனை இல்லை. ஆனால் உடல் முழுவதும் எண்ணற்ற விதைகள் ஒட்டிக்கொண்டால் பறவையால் சிறகை விரித்துப் பறக்க முடியாது. கால்களில் ஒட்டிக்கொண்டாலோ கிளையை விட்டு நகரவே முடியாது. எவ்வளவு முயற்சி செய்தாலும் இறுதியில் பறவைக்குத் தோல்வியே கிடைக்கும். நாட்கணக்கில் அதே நிலையில் இருந்து முடிவில் இறந்துவிடும். அதனால்தான் மரத்திலும் மரத்தடியிலும் இறந்துபோன பறவைகளின் உடல்களைப் பார்க்க முடிகிறது. மரம் வேண்டுமென்றே பறவைகளைப் பிடிப்பதாகவும் கொல்வதாகவும் நாம்தான் தவறாக நினைத்துக் கொள்கிறோம்.

மரத்தில் ஒட்டிக்கொண்டு பறவை இறந்துபோவதால் மரத்துக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருவேளை மரம் பறவையின் உடலிலிருந்து சத்துக்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறதோ? என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். பறவையின் இறப்பால் மரத்துக்கு இழப்புதானே தவிர ஆதாயம் ஏதுமில்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஆமாம். பறவை உயிரோடு வேறிடங்களுக்குப் பறந்துசென்றால்தானே அதன் விதைகள் பரவும். மரத்திலேயே இறந்துவிட்டால் விதைபரவல் நடைபெறாது அல்லவா?

ஹவாய்த் தீவு மக்கள் இம்மரத்தின் இலைகளை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். பழப்பிசினை களிமண்ணோடு கலந்து உடைந்த பாத்திரங்களை ஒட்டவைக்கவும் ஓட்டைகளை அடைக்கவும் பயன்படுத்துகிறார்களாம்.

சுட்டிகளே, பிசோனியா மரம் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? இனி யாராவது இம்மரம் பறவைகளைக் கொல்லும் என்று சொன்னால் உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். சரியா?  

(படங்கள் உதவி – விக்கிபீடியா)

Share this: