ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் – தொகுப்பு-1

Australia_birds_book

இம்மின்னூலின் முன்னுரையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆசிரியர் கீதா மதிவாணன் ‘ஆஸ்திரேலியா பறவைகளின் சொர்க்கம்’ என்கிறார்.  அங்கு வாழும் 800 க்கும் மேற்பட்ட பறவையினங்களில் பாதி, உலகின் வேறெங்கும் காண முடியாத அபூர்வப் பறவைகளாம்.  இதில் 25 அதிசய பறவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

காஸோவரி என்பது கொம்புள்ள பறவை.  கெக்கெக்கே எனச் சிரிக்கும் மீன்குத்தி இனத்தைச் சேர்ந்த குக்கபரா குடும்பமாய் வாழுமாம். அம்மா, அப்பாவுடன் மூத்த பிள்ளைகளும் வேட்டைக்குச் சென்று உணவு கொண்டுவந்து, தம்பி தங்கைகளுக்கு ஊட்டி வளர்க்குமாம்.

புதர்க்கோழி ஒரு மீட்டர் உயரம், நான்கு மீட்டர் விட்டம்(!) உள்ள மண்மேட்டைக்கட்டி அதில் முட்டையிடும்.  மண்மேடு கட்ட பயன்படுத்தப்படும் குச்சிகள், இலைதழைகளின் எடை மட்டுமே 40 கிலோ இருக்கும்!. 

ஆஸ்திரேலியா மேக்பை பறவைகளுக்குக் கசாப்புக்காரப் பறவைகள் என்று பெயர்.  ஏன் தெரியுமா?  கசாப்புக் கடைக்காரர் இறைச்சியைத் தொங்கவிட்டிருப்பது போல, இதுவும் வேட்டையாடிய இரையை மரக்கிளையிலோ, மர இடுக்கிலோ தொங்கவிடுமாம்!

அன்னங்கள் என்றாலே வெள்ளை நிறப்பறவைகள் தாம், நம் நினைவுக்கு வரும்.  ஆனால் அதில் கருப்பும் உள்ளது என்பது புதிய தகவல்.  பெயருக்கேற்றாற் போல் ரெயின்போ லாரிகீட்ஸ் பறவைகளின் பல வண்ணப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. இன்னும் காட்காலா, கொரெல்லா, கொண்டைப்புறா, வோங்கா புறா, பழந்தின்னிப்புறா, வைரப்புறா, ரேசெல்லாக்கள், மேக்பை லார்க் என விதவிதமான பறவைகளின் அதிசய தகவல்களும், வண்ணப்படங்களும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கின்றன. 

இயற்கையில் ஈடுபாடுள்ள அனைவருக்கும் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய மின்னூல்.  குழந்தைகளுக்கு வாசிப்பிலும், இயற்கையிலும் நாட்டத்தை ஏற்படுத்திட இது போன்ற நூல்களை அவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். வண்ணப்படங்கள் அதிகமுள்ளதால், ஆர்வமுடன் வாசிக்கத் துவங்குவார்கள். பறவை கூர்நோக்கல் போன்ற, சுவாரசியமான பொழுது போக்கில் ஈடுபடவும், இந்நூல் உதவிசெய்யும்.

வகைகட்டுரை கிண்டில் மின்னூல்
ஆசிரியர்கீதா மதிவாணன்
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் https://www.amazon.in/dp/B098XVX17X
விலை₹ 49/-
Share this: