நடுங்கும் மரம்

aspen trees

மரம் மண்ணின் வரம் – 20

வணக்கம் சுட்டிகளே. மரத்தின் பெயரைப் பார்த்தவுடன் மரம் ஏன் நடுங்கும்? குளிரினாலா? பனியினாலா? என்றெல்லாம் யோசிக்காதீங்க. ஆஸ்பென் என்ற பெயருடைய இந்த மரம் உண்மையில் நடுங்குவது கிடையாது. காற்றடிக்கும்போது அதன் இலைகள் சடசடவென்று இடவலமாக மாறி மாறி ஆடும். தொலைவில் இருந்து பார்க்கும்போது மரம் நடுங்குவதைப் போன்று தோற்றம் அளிக்கும். அதனால்தான் இந்த மரத்துக்கு ‘quaking aspen, trembling aspen, trembling poplar என்ற பெயர்கள் இடப்பட்டுள்ளன. மரத்தின் தண்டு வெள்ளை நிறத்தில் காணப்படுவதால் ‘வெள்ளை போப்லார்’ என்றும் இலையுதிர்காலத்தில் இலைகள் பொன்னிறத்தில் காணப்படுவதால் ‘கோல்டன் ஆஸ்பென்’ என்றும் பெயர் பெற்றுள்ளது.

எல்லா மரத்திலும்தான் இலைகள் காற்றில் அசையும். இந்த மரத்தில் மட்டும் என்ன சிறப்பு என்று கேட்பீங்க. இந்த மர இலைகளின் காம்புகள் உருண்டையாக இல்லாமல் தட்டையாக இருக்கும். அதனால் இலைகள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வேகவேகமாகத் திரும்பி அசையும்போது கிடுகிடுவென்று நடுங்குவதைப் போல இருக்கும்.

ஆஸ்பென் மரம் சுமார் 18 மீட்டர் உயரம் வரை வளரும். மரத்தின் சுற்றளவு 80 செ.மீ. அளவும் இருக்கும். மரத்தின் பட்டை வழுவழுப்பாவும் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

மரம் வளர வளர பக்கவாட்டுக் கிளைகளை இழந்துவிடும். கிளைகள் விழுந்த இடங்களில் கருப்பு நிறத்தில் வடுக்கள் காணப்படும். அவை பார்ப்பதற்கு கண்களைப் போன்று இருப்பதால் ஆஸ்பென் மரங்கள் குழந்தைகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்று குழந்தைகளிடம் கதைகள் சொல்லப்படுவதுண்டு.

ஆஸ்பென் மரங்களில் ஆண் மரம், பெண் மரம் எனத் தனித்தனியாக உண்டு. ஆஸ்பென் மரங்கள் நூறு வருடங்கள் முதல் இருநூறு வருடங்கள் வரை வாழக்கூடியவை. மரக்கன்றுகள் பத்து வருடங்களுக்குப் பிறகு பூக்க ஆரம்பிக்கும். ஆஸ்பென் மரங்கள் விதைகள் மூலம் மட்டும் அல்லாது, வேர்களின் மூலமும் புதிய சந்ததிகளை உருவாக்குகின்றன. பக்கவாட்டில் நீண்டு வளர்ந்துகொண்டே போகும் ஆஸ்பென் மர வேரிலிருந்து அதைப் போன்றே புதிய கன்றுகள் உருவாகி மரமாகின்றன. அப்படி ஒரே மரத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மரங்கள் உருவானதால் ஒரு காடே உருவான அதிசய நிகழ்வும் ஏற்பட்டிருக்கிறது. எப்படி ஒரு ஆலமரம் விழுதுகளால் புதிய மரங்களை உருவாக்கி தன் இனத்தைப் பெருக்குகிறதோ அதைப் போலவே, ஆஸ்பென் மரமும் தன் வேர்களிலிருந்து புதிய மரங்களை உருவாக்கி இனத்தைப் பெருக்குகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தேசியப் பூங்காவில் சுமார் 106 ஏக்கர் பரப்பளவில், சுமார் 47,000 மரங்களைக் கொண்ட ஆஸ்பென் காடு ஒரே ஒரு ஆண் மரத்தின் வேரிலிருந்து உருவான காடுதான். அக்காட்டில் உள்ள அனைத்து ஆஸ்பென் மரங்களும் இப்போதும் வேர்களால் ஒன்றோடொன்று பிணைந்து ஒரே மரமாக உள்ளன என்பது வியக்கவைக்கும் உண்மை. 

ஆண் மரத்திலிருந்து உருவானதால் அந்தக் காட்டின் அனைத்து மரங்களும் ஆண் மரங்களே. ‘பாண்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆஸ்பென் காடு உருவாகி பன்னிரண்டாயிரம் முதல் பதினான்காயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. எனவே தற்போது வாழும் மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரினம் என்ற பெருமையும் இந்த ஆஸ்பென் வனத்துக்கு உண்டு.

ஆஸ்பென் மர இலைகள் இனிப்புச்சுவை கொண்டவை என்பதால் அப்பகுதியில் வாழும் கடம்பை மான்களும் கால்நடைகளும் புதிய மரக்கன்றுகளை மேய்ந்துவிடுகின்றன. அதனால் ஆஸ்பென் மரங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதைத் தவிர்க்க, தற்போது ஆஸ்பென் வனப்பகுதியில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

என்ன சுட்டிகளே, அதிசயமான ஆஸ்பென் மரம் பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு மரத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி -Pixabay)

Share this: