மரம் மண்ணின் வரம் – 18
வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைக் கேட்டதும் என்னது, எறும்பு மரமா? என்று ஆச்சர்யப்படுவீங்க. Ant tree என்ற காரணப்பெயரைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Triplaris americana என்பதாகும். இதற்கு ‘பிசாசு மரம்’ என்ற பெயரும் உண்டு. மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்டது இம்மரம். இது Tangarana tree என்றும் குறிப்பிடப்படுகிறது.
எறும்புகளுக்கும் இந்த மரத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாமா? Pseudomyrmex Triplarinus என்ற விஷ எறும்புகள் இந்த மரத்தின் தண்டில் சிறிய துளை இட்டு உள்ளே வளை அமைத்து காலனியாக வசிக்கின்றன. மரத்தில் வசிக்கும் அசுவுணிப் பூச்சிகளையும் மரத்தின் பிசினையும் உண்டு அவை வாழ்கின்றன. அவைதான் இந்த மரத்தின் பாதுகாவலர்களாகவும் இருக்கின்றன. எப்போதும் அடிமரத்தைச் சுற்றி எறும்புகள் காவல் இருக்கும். மரத்தை விலங்குகள், பறவைகள், மனிதர்கள் யாரும் நெருங்க முடியாது. அது மட்டுமல்ல, மரம் நன்றாக செழித்து வளர்ந்தால்தானே எறும்புகளாலும் நன்றாக வாழமுடியும். அதனால் மரம் வளர்வதற்கும் அவை உதவி செய்கின்றன. எப்படி தெரியுமா?
முதலில் இந்த மரத்தைச்சுற்றியிருக்கும் பகுதியை எறும்புப்படை சுத்தம் செய்யும். அப்போதுதான் மரம் வளரத் தேவையான சூரிய ஒளி தடையின்றிக் கிடைக்கும். வேருக்குக் கிடைக்கும் நீரையும் பிற சத்துகளையும் மற்ற செடிகொடிகள் பகிர்ந்துகொள்ளாது. மரத்துக்கு நெருக்கமாக வேறு மரங்கள் இருந்தால் அவற்றின் இலைகளையும் கிளைகளையும் நறுக்கிவிடும்.
எறும்பு மரத்தில் கூடு கட்டும் ஒரே பறவை மியூசிகல் ரென் எனப்படும் பாடும் பறவைதான். இந்தப் பறவையை மட்டும் எறும்புகள் ஒன்றும் செய்யாமல் விட்டுவைப்பது எப்படி? பறவை கூடுகட்டத் தேர்ந்தெடுக்கும் காய்ந்த இலைகள்தான் காரணம். காய்ந்த இலைகள் என்பதால் எறும்புகள் கண்டுகொள்வதில்லை. மேலும் அந்தக் காய்ந்த இலையின் வேதிப்பொருட்கள் எறும்புகளை அண்டவிடுவதில்லை. அதனால் பறவையும் குஞ்சுகளும் எறும்புகளிடமிருந்து தப்பித்துவிடுகின்றன.
எறும்புகளுக்கும் மரத்துக்குமான தொடர்பு சுமார் ஐம்பது மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த மரம் இல்லாமல் எறும்புகளால் வாழ முடியாது. அந்த எறும்புகள் இல்லாமல் இந்த மரத்தால் வாழ இயலாது. இரண்டு இனங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன.
பெரு நாட்டைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தங்கள் இனத்தில் யாராவது குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிக்க இந்த மரத்தில்தான் கட்டிவைப்பார்களாம். ஒரு எறும்பு கடித்தாலே நம்மால் தாங்க முடியாது. எறும்புக்கூட்டமே கடித்தால் அதுவும் மூர்க்கம் நிறைந்த எறும்புக்கூட்டமே கடித்தால் என்னாவது? குற்றவாளிக்கு மரணம் உறுதிதான். எனவே இந்த மரத்துக்கு ‘நீதி மரம்’ என்ற பெயரும் உண்டு.
சவுக்கு மரத்தைப் போல இதிலும் ஆண் மரம், பெண் மரம் என்று தனித்தனியாக வளர்ந்து பூக்கும். இவற்றின் விதைகள் மூன்று இறக்கைகளுடன் ஹெலிகாப்டர் போல காற்றடிக்கும் திசையில் சுழன்று பறக்கும். தாய் மரத்தை விட்டுத் தொலைவில் வேறு இடத்தில் விழுந்த பிறகு அங்கு வேர் பிடித்து புதிய மரம் வளரும்.

இதன் பளீரென்ற இளஞ்சிவப்பு நிறப் பூக்களின் அழகுக்காக பல இடங்களில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது களைத்தாவரம் என்ற வகைமையில் சேர்க்கப்பட்டுள்ளன. நன்கு வளர்ந்த மரத்தை வெட்டினாலும் அடிமரத்திலிருந்து புதிதாகத் துளிர் விட்டு மரம் மீண்டும் வளரும். இம்மரத்தின் இலைகளும் விஷத்தன்மை வாய்ந்தவை.
சுட்டிகளே, மிக ஆபத்தான எறும்பு மரம் பற்றி அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு மரத்தோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(Pc. mauro halpern)