‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம்’ உதயம்

photo of tamilnadu childrens artists association launch invitationwriters

சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் மாநாடு 13/06/2021 அன்று, இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்க, சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களும், குழந்தைநல செயற்பாட்டாளர் சாலை செல்வம் அவர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்து வழங்கினர்.

நிகழ்வுக்குத் தலைமை வகித்த எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் பேசிய போது “அழ.வள்ளியப்பா காலத்தில் அவர் தலைமையில் குழந்தை எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டு, ஏறக்குறைய 300 எழுத்தாளர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள்; 1975 ஆம் ஆண்டு, அவர்கள் 200 சிறார் நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டார்கள்; அக்காலத்தைச் சிறார் இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். என் சிறுவயதில் மாம்பழம், அல்வா, அணில், பூந்தளிர், கோகுலம், வாண்டு மாமா போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் பத்திரிக்கைகள் வெளிவந்தன.  தற்போது சுட்டிவிகடன் கூட நின்றுவிட்டது.

கடந்த பொற்காலத்தை மீட்டெடுக்கவும், புதிய சவால்களை எதிர்கொள்ளவும் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி, அவர்களுக்கான கலை இலக்கிய படைப்புகள் கல்வி போன்ற குழந்தைகள் நலன் சார்ந்த செயல்களை முன்னெடுக்கவும், ஓர் அமைப்பைத் தொடங்க வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு போரூரில் 20 சிறார் எழுத்தாளர் கலந்து கொண்டு, ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.  அந்தக் கூட்டம் தான் இன்றைய இந்த அமைப்பு மாநாட்டுக்கான துவக்கப் புள்ளி.

அடுத்தபடியாக 2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் இரண்டு நாள் பயிற்சி முகாமைச் சென்னையில் நடத்தினோம்.  அதில் 35 கதை சொல்லிகளும் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.  பின்னர் 10 நாள் இணைய வழி கருத்தரங்கை நடத்தினோம்.  இன்று வரலாற்றில் முக்கியமான நாள்.  அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இச்சங்கத்தில் எழுத்தாளர், கலைஞர், ஆசிரியர், கலை வல்லுநர், குழந்தைநலச் செயற்பாட்டாளர், கதைசொல்லி, கல்வியாளர், வாசகர் என அனைவரும் உறுப்பினர் ஆகலாம்.  எல்லோரும் சேர்ந்து, எதிர்காலத்தில் குழந்தைகளின் உலகை மாற்ற முடியும்” என்றார்.   

.இந்த மாநாட்டுக்கு முன்னிலை வகித்த எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளரும் ஆன சுகுமாரன் அவர்கள் பேசிய போது, “சிறார் எழுத்தாளருக்கான சங்கம் துவங்கும் இந்த நாள் இனிய நாள்.   எழுத்தாளருக்கும், கலைஞருக்கும் மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் குழந்தை இலக்கியத்துக்கும் இனிய நாள். குழந்தைகளுக்கான நல்ல பல படைப்புகள் நூலகங்களிலும், கடைகளிலும் இருந்தாலும், குழந்தைகளின் கைகளில் போய்ச் சேரவில்லை. இந்த அவல நிலையை மாற்றுவது இச்சங்கத்தின் நோக்கம்.. 

முகவரியற்று இருக்கும் சிறார் எழுத்தாளர்க்கு, இச்சங்கம் முகவரியாக இருக்கும்.  1950 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட குழந்தை எழுத்தாளர் சங்கம் 2000 ஆம் ஆண்டு, தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை எழுத்தாளர்களை வழிநடத்தவும் அரவணைக்கவும் எந்தவொரு அமைப்பும் இல்லை. இன்று இச்சங்கம் அமைவது காலத்தின் கட்டாயம்” என்றார்.

இச்சங்கத்தின் நிர்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசிய தோழர் நீதிமணி அவர்கள், “மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று அதை விடுவதில்லை; காலம் உண்மையானது.  அது தனக்கு என்ன தேவையோ அதைக் கொண்டுவந்து போட்டுவிடும். அப்படித்தான் இச்சங்கத்தைக் காலம் உருவாக்கியிருக்கிறது” என்று கூறினார்..

மூத்த சிறார் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான கமலாலயன் அவர்கள் தம் உரையின் போது, “இந்த நாள் மிக முக்கியமான நாள்; கொரோனா பெருந்தொற்று நம்மை மூச்சு திணற வைக்கும் இன்றைய சூழலில், நெருக்கடிகளைத் தாண்டித் திமிறி எழுந்து, ஒரு புது யுகத்தின் வரவை முன்னறிவிக்கிறது, இந்தச் சிறார் எழுத்தாளர்,கலைஞர் சங்கத் தொடக்க மாநாடு.

சாதிவாதமும், மதவாதமும் மக்களைக் கூறு போட்டு மோதவிடும் இன்றைய சூழலில் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே, நம் அனைவருக்கும் வாழ்வு என்று உரத்துக் கூவும் குயிலென ஒலியெழுப்பிக் கொண்டு, சிறகடிக்க முனைகிறது இச்சங்கம்”.என்று குறிப்பிட்டார்.

வழிகாட்டுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பேசிய போது,  “மனம் வெறுத்துப் போகும் அளவுக்கு மரணங்கள்; நல்லடக்கம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இழந்த காலம்; யாருக்கும் இறுதி அஞ்சலி செலுத்த நேரில் போக முடியாத காலம்; இந்தப் பெருந்தொற்று காலத்தில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், குழந்தைகளே.  இந்தக் காலத்தில் சிறார்க்காகச் சங்கம் துவங்குவது, காலத்தின் தேவை.  குழந்தைகளின் தேவைகள், உரிமைகள் ஆகிய இவற்றின் மீது பொது சமூகத்தின் கவனத்தைக் கூர்மையாக ஈர்க்கும் விதமாக, இச்சங்கம் வருங்காலத்தில் அரும்பாடுபட வேண்டியிருக்கும்; கூடிக் கனவு காண்கின்ற அமைப்பு என்பது, ஒரே கனவை எல்லோரும் சேர்ந்து காண்பது” என்றார்.  

‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற நூலுக்குப் பாலசாகித்ய விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் அவர்கள், தம் வாழ்த்துரையில்  சிறார் எழுத்தாளர்களுக்குப் பரிசளித்து உற்சாகமூட்டிய அழ.வள்ளியப்பாவின் சேவையைப் பாராட்டிப் பேசினார்.  அது போல தற்காலத்திலும் படைப்பாளர்க்குப் பரிசுகளும் விருதுகளும் கொடுத்தால் எழுத்தாளர்கள் உற்சாகமாக எழுத வருவார்கள் என்று சொன்னார்.

சிறார் எழுத்தாளர் விழியன் ஆற்றிய நோக்க உரையில்,

“குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கும் அனைவரையும் ஒரு சேரப் பார்ப்பது, மிகவும் மகிழ்ச்சி. இதை ஒரு வரலாற்று தருணமாக மாற்றுவோம். 1975 ஆம் ஆண்டு 375 எழுத்தாளர்களின் பெயர் பட்டியல் வெளியிட்டு, ஒரே நிகழ்வில் 200 நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.  ஆனால் நாங்கள் பால சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் அவர்களுக்காக  ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், அவர் எழுதிய தலைப்புகளில் பேசுவதற்கு ஆட்களைத் திரட்டுவதற்குள் திணறிவிட்டோம். அவ்வளவு வறட்சியான எண்ணிக்கையில் தான், நாம் இருக்கிறோம். எனவே எல்லாரையும் ஒன்று திரட்டுவது மிகவும் முக்கியம்.

குழந்தைகளின் நிலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான், எல்லோருக்கும் இருக்கும் பொது நோக்கம்.   இந்தப் பேரிடர் காலத்தில் எல்லாரும் சேர்ந்து கை கோர்த்து, இன்னும் வலுவாக நடக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் இச்சங்கம் உருவானது. இதன் முதன்மையான நோக்கம், குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்குப் பாடுபடுவது; குறிப்பாக கலை இலக்கிய மேம்பாடு சார்ந்து செயல்படுவது ஆகும்.  எங்கே குழந்தைமை பாதிக்கப்படுகின்றதோ, அங்கே இந்தச் சங்கத்தின் குரல் ஒலிக்கும்.  . 

குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்துவது, இந்தச் சங்கத்தின் பிரதான நோக்கம்.  ஒரு புத்தகம் குழந்தையின் கையில் போய்ச் சேர பாலமாக இருப்பது பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாம். இவர்களிடம் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றிச் சொல்ல வேண்டும்.  எனவே  குழந்தைகள் மட்டுமின்றி ஆசிரியர், பெற்றோர் ஆகியோரையும் அரவணைத்துச் செல்வது அவசியமாகிறது. 

பதிப்பாளருக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளைக் கண்டறிந்து போக்குதல், புதிதாக எழுத வருபவர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் என்றாய்ந்து அவர்களை ஊக்குவித்தல் அவர்களுக்காக நிறைய பயிலரங்குகளை நடத்துதல் என ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த இலக்கிய செயல்பாட்டை நடத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்வது, இதன் நோக்கம்.  

இதுமட்டுமின்றி வரலாறு, மரபு, பொருளியல், தொல்லியல். அரசியல், பண்பாடு, சூழலியல், கலைகள் சார்ந்து, கடந்த காலத்தையும், சம காலத்தையும் வெளிப்படுத்தக் கூடிய கலை இலக்கிய வகைகளைப் படைக்கவும்,  அவற்றின் வாசிப்பைப் பரவலாக்கவும் தேவையான முயற்சிகளைச் சங்கம் முன்னெடுக்கும்.  குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்காகச் சங்கம் குரல் கொடுக்கும்.

சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர்களைக் கெளரவிப்பது குறித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதைப் போலவே பால புரஸ்கார் சாகித்ய பரிசு பெற்ற சிறார் எழுத்தாளர்களையும் கெளரவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவோம்.  கல்வியில் சிறார் இலக்கியத்தை எப்படியெல்லாம் கொண்டு செல்லலாம் என்பதற்கு அரசுக்கு இச்சங்கம் வழிகாட்டும்.  சிறார் இலக்கியத்துக்கான ஓர் இணைய தளத்தை உருவாக்கி, அக்குடையின் கீழ் எல்லாரையும் கொண்டு வருவோம்.

கேரளாவின் பால சாகித்ய இன்ஸ்டிட்யூட் போன்று தமிழகத்திலும் ஒரு சிறார் கலை இலக்கிய வெளியீட்டுக் கழகம் நிறுவ அரசை வலியுறுத்துவோம்.  எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகக் காட்சி நடத்த முயற்சிகள் மேற்கொள்வோம்.   இந்தியாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் இது போல் ஒன்றாக இணைவது, வரலாற்றில் இது தான் முதல் முறை” என்று குறிப்பிட்டார்.

சங்கத்தின் தலைவராக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான  உதயசங்கர் அவர்களும், துணைத்தலைவராக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான சுகுமாரன் அவர்களும் பொதுச்செயலாளராகச் சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களும், துணைப்பொது செயலாளராக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான சாலை செல்வம் அவர்களும், பொருளாராகப் பஞ்சுமிட்டாய் இணையதள ஆசிரியரும், எழுத்தாளருமான பிரபு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களைக் கதைக்களம் என்ற பெயரில் இயங்கும் கதைசொல்லி வனிதாமணி அறிவித்தார்.

மூத்த எழுத்தாளர் கமலாலயன்,  எழுத்தாளர் நீதிமணி, எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி முதல்வர் வெற்றிச்செழியன், சிறார் எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ, ஆசிரியர் சிவா,  ஆசிரியர் சுடரொளி, பாரதிபுத்தகாலயம் நிறுவனர் நாகராஜ் சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன், வானம் பதிப்பக நிறுவனர் மணிகண்டன், சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், கதைக்களம், பட்டாம்பூச்சி நிறுவனர் கதைசொல்லி வனிதாமணி, சிறார் நல செயற்பாட்டாளர் இனியன், சிறார் அறிவியல் செயற்பாட்டாளர் அறிவரசன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆலோசனைக் குழு உறுப்பினர்களைப் பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி முதல்வர் வெற்றிச்செழியன் அறிமுகம் செய்தார்.      

சிறார் எழுத்தாளர் ஏ.எஸ்.பத்மா, மலையாள சிறார் எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், சிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், ,கவிஞர் யாழன் ஆதி, கல்வியாளர் முனைவர் அருணா ரத்னம், துளிர் அறிவியல் இதழின் ஆசிரியர் முனைவர் இராமானுஜம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   பொருளாளர் பிரபு நன்றி கூற, இணைய மாநாடு இனிதே நிறைவடைந்தது.

Share this:

2 thoughts on “‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம்’ உதயம்

  1. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு குறித்து சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இந்த சங்கம் அமைய உந்துசக்தியாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.

Comments are closed.