மரம் மண்ணின் வரம் – 7
வணக்கம் சுட்டிகளே. ரப்பர் என்றவுடன் உங்களுடைய பென்சில் பாக்ஸில் இருக்கும் ரப்பர் எனப்படும் அழிப்பான் நினைவுக்கு வரும். அது தற்போது செயற்கை ரப்பரால் தயாரிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அது இயற்கை ரப்பரால் தயாரிக்கப்பட்டது. இயற்கை ரப்பரா என்று வியப்பீர்கள். ஆம், ரப்பர் மரத்திலிருந்து பெறப்படுவதுதான் இயற்கை ரப்பர்.
ரப்பர் மரத்திலிருந்து எப்படி ரப்பர் கிடைக்கிறது தெரியுமா? மா, பலா, ஆல் போன்ற மரங்களில் இலையைக் கிள்ளினாலோ, கிளையை ஒடித்தாலோ பால் வடிவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒன்றிரண்டு துளிகள் வந்து பிறகு நின்றுவிடும். ஆனால் ரப்பர் மரத்திலிருந்து தினமும் கிண்ணம் கிண்ணமாக பால் வடிக்கலாம். அதனால் ரப்பர் மர வளர்ப்பும் ரப்பர் தயாரிப்பும் வணிகரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அமேசான் காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ரப்பர் மரங்கள் தற்போது ஆசியாவில் பல நாடுகளில் பயிரிடப்பட்டு ரப்பர் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன. உலக அளவில் ரப்பர் உற்பத்தியில் ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே 90% அளவுக்கு ரப்பர் உற்பத்தியாகிறது.
ரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் Hevea brasiliensis. இம்மரம் 20 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் அதிகாலையிலேயே தங்கள் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். ரப்பர் மரத்தண்டுகளின் மேற்பட்டையில் குறிப்பிட்ட சாய்கோணத்தில் கூர்மையான கத்தியால் மெல்லிய கீறலை உருவாக்குவார்கள். அதிலிருந்து வடியும் பால், மரத்தோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கிண்ணத்தில் சொட்டுச் சொட்டாகச் சேரும். பிறகு தொழிலாளிகள் அவற்றைப் பெரிய கலனில் சேகரித்து ரப்பர் தொழிற்சாலைக்கு அனுப்புவார்கள்.
ரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் latex எனப்படும். இந்த ரப்பர் பால் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு மூலப்பொருளாக மாற்றப்படுகிறது. பிறகு அத்துடன் கந்தகம் சேர்க்கப்பட்டு வலிமை கூட்டப்பட்டு, பிற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் கார் டயர்கள் ரப்பர் மரப் பாலில் இருந்துதான் தயாரிக்கப்பட்டன.
தற்காலத்தில் இயற்கை ரப்பரைக் கொண்டு மருத்துவ உபகரணங்கள், மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் கையுறைகள், பொம்மைகள், சில வகை ஆடைகள், மெத்தைகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றது. உங்களுடைய குட்டித் தம்பியோ, குட்டித் தங்கையோ எந்நேரமும் வாயில் வைத்து சப்பிக்கொண்டிருக்கும் சூப்பான் கூட இயற்கை ரப்பரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
சரி, மரங்களிலிருந்து ஏன் பால் வடிகிறது தெரியுமா? நமக்கு அடிபட்டால் என்ன ஆகிறது? ரத்தம் வருகிறது. பிறகு அது அப்படியே உறைந்து நின்றுவிடுகிறது அல்லவா? அதைப் போலவே ரப்பர் மரத்தில் ஏதாவது கீறலோ, வெட்டோ ஏற்பட்டால் பால் வடிகிறது. கொஞ்சநேரத்தில் நின்று அப்படியே காய்ந்துவிடுகிறது. அந்தக் கீறல் அல்லது வெட்டு வழியாக நுண்கிருமிகள் உள்ளே நுழைந்து மரத்தைத் தாக்காமல் பாதுகாப்பதற்கான உபாயம்தான் இது.
சுட்டிகளே, இந்த மாதம் சுட்டி உலகத்தில் பயனுள்ள மரமான ரப்பர் மரம் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு மரம் பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(படம் உதவி Pixabay)