மீர்கட்

மீர்கட்

விநோத விலங்குகள் – 7

வணக்கம் சுட்டிகளே. இந்த மாத விநோத விலங்கு எது என்று அறிய ஆவலாக உள்ளீர்களா? இரண்டு கால்களில் நின்றுகொண்டு சுற்றுமுற்றும் குறுகுறுவென்று நோட்டமிடும் மீர்கட்தான் அது. கீரிப்பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த மீர்கட்கள் மிகவும் சுவாரசியமான விலங்குகள். இதற்கு ‘பாலைவனக் கீரி’ என்ற பெயரும் உண்டு. இதன் அறிவியல் பெயர் Suricata suricatta

மீர்கட்கள் எப்போதுமே குழுவாக வசிக்கும். ஒரு குழுவில் இருபது முதல் ஐம்பது மீர்கட்கள் வரை இருக்கும். இவை பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள பாலைநிலங்களில் காணப்படுகின்றன. வறட்சியான பாலையில் வாழ்வதால் கடுமையான வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க மண்ணுக்குள் வளை அமைத்து அவற்றுள் வாழ்கின்றன. வளைக்குள் ஏராளமான அறைகளும் வெளியேறும் பொந்துகளும் இருக்கும். இவை பகலில் இரை தேடுவதற்காக மட்டுமே வளையை விட்டு வெளியில் வரும்.

மீர்கட் அனைத்துண்ணி. புழு, பூச்சிகள், சிறு சிறு ஊர்வன, பறவைகள், முட்டைகள் போன்றவற்றையும் பழங்கள், இலைகள் போன்ற தாவர உணவையும் தின்னும்.

மீர்கட்கள் மிகுந்த புத்திசாலிகள். ஒரு தேளைப் பிடித்தால் உடனே தின்றுவிடாது. முதலில் அதன் விஷக் கொடுக்கை நீக்கிவிட்டு பிறகுதான் தின்னும். சில சமயம் பாம்பையும் பிடித்துத் தின்னும். கீரிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் கீரிகளைப் போலவே இவற்றுக்கும் பாம்பின் விஷத்தைக் கிரகித்துக்கொள்ளும் வல்லமை உண்டு.

மீர்கட்களின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா? ஒற்றுமை. ஒவ்வொன்றும் தத்தம் கடமையை உணர்ந்து ஒற்றுமையோடு செயல்படும். மீர்கட்கள் இரை தேட வெளியில் போகும்போது சில மீர்கட்கள் மட்டும் வளைக்குள்ளேயே இருந்து தாதிகளைப் போல குட்டிகளைப் பார்த்துக்கொள்ளும். இரை தேடப் போகாததால் அன்று அவை பட்டினிதான். மறுநாள் வேறு சில மீர்கட்கள் குட்டிகளைப் பார்த்துக்கொண்டு பட்டினியாக இருக்கும்.

மீர்கட்கள் பெரும்பாலும் வளைக்குப் பக்கத்திலேயே இரை தேடும். அப்போதும் ஏதாவது ஒரு மீர்கட் மட்டும் காவலாளியாக வேலை பார்க்கும். எப்படி தெரியுமா? இரை தேடப் போகாமல், அது மட்டும் ஒரு உயரமான மேட்டின் மேல் ஏறி மனிதர்களைப் போல இரண்டு கால்களால் நின்றுகொண்டு சுற்றுமுற்றும் பார்த்தபடி இருக்கும். எதிரி தென்பட்டால் எச்சரிக்கைக் குரல் எழுப்பும். உடனடியாக எல்லா மீர்கட்களும் தங்களுக்கு அருகில் இருக்கும் பொந்துகள் வழியாக வளைக்குள் ஓடிவிடும்.    

மீர்கட்கள் பாலையில் வசித்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்காது. மீர்கட் உண்ணும் இரையின் மூலம் கிடைக்கும் ஈரப்பதமே இவற்றுக்குப் போதுமானதாம்.  

மீர்கட்கள் மிகுந்த புத்திக்கூர்மை உடைய விலங்குகள் என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சுட்டிகளே, மீர்கட் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கு பற்றித் தெரிந்துகொள்ளலாமா? 

(படம் – Geeetha Mathi)

Share this: