பறவைகள் பல விதம் – 7
வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கும் பறவை எது தெரியுமா? உலகிலேயே மிகப்பெரிய பறவை என்ற சிறப்பை உடைய ostrich எனப்படும் நெருப்புக்கோழிதான் அது.
நெருப்புக்கோழி சுமார் 2.8 மீட்டர் உயரம் வரை இருக்கும். ஒரு மனிதனின் சராசரி உயரமே 1.7 மீட்டர்தான் என்றால் நெருப்புக்கோழியின் உயரம் எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்க. அதன் எடை சுமார் 160 கிலோ வரை இருக்கும்.
பறக்கவியலாத பறவை இனமான ராட்டைட் எனப்படும் பிரிவைச் சேர்ந்தது நெருப்புக்கோழி. உலகின் மிகப்பெரிய பறவையாக இருந்தாலும் அதனால் பறக்க இயலாது என்பது எவ்வளவு வியப்பான தகவல். இதன் அறிவியல் பெயர் Struthio camelus.
நெருப்புக்கோழியால் பறக்கத்தான் முடியாதே தவிர, படு வேகமாக, அதாவது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் ஓட முடியும்.
தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, அரேபியா போன்ற நாடுகளில் குதிரைப் பந்தயம் போல நெருப்புக்கோழிப் பந்தயங்கள் நடைபெறுகின்றன. பந்தயத்தில் கலந்துகொள்பவர்கள் நெருப்புக்கோழிகளின் மேல் சவாரி செய்து பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள். பழைய காலத்தில் குதிரைக்கு சேணம் பூட்டுவதைப் போல நெருப்புக்கோழிக்கும் சேணம் பூட்டி வண்டி இழுக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சுட்டிகளே, நெருப்புக்கோழிக்கு ‘நெருப்புக்கோழி’ என்ற பெயர் ஏன் வந்தது, தெரியுமா? கடுமையான வெப்பம் நிலவும் பாலையில் வசிப்பதால் இவை நெருப்புக்கோழி அல்லது தீக்கோழி எனப்படுகின்றன.
நெருப்புக்கோழியின் கால்கள் மிக உறுதியும் வலிமையும் கொண்டவை. எதிரியை ஓங்கி ஒரு உதை விட்டால் போதும். எதிரிக்கு மரணம் நிச்சயம். அதன் காலில் இருக்கும் பத்து செ.மீ. நீளமுள்ள நகம் கத்தி போல எதிரியின் உடலைக் குத்திக் கிழித்துவிடும். எதிரில் இருப்பது சிங்கம், சிறுத்தை என எதுவாக இருந்தாலும் அதற்கும் அதே கதிதான்.
நெருப்புக்கோழிகளின் பிரதான உணவு இலை, பூ, விதை, கிழங்குகள் போன்ற தாவர உணவுதான். ஆனால் பூச்சி, புழு, பல்லி போன்ற சிற்றுயிர்களையும் தின்னும். நெருப்புக்கோழிக்கு பற்களே கிடையாது. அதனால் அவை இரையோடு சில கற்களையும் சேர்த்து விழுங்கி சீரணிக்கும்.
நெருப்புக்கோழி கூடு கட்டாது. மண்ணில் பெரிய அகலமான பள்ளம் தோண்டி அதில் முட்டையிட்டு அடைகாக்கும். நெருப்புக்கோழியின் முட்டைதான் மற்ற எல்லா உயிரினத்தின் முட்டையை விடவும் பெரியது. ஒவ்வொரு முட்டையும் சுமார் ஒன்றரை கிலோ எடையுடன் இருக்கும். முட்டைகளை பகலில் பெண் நெருப்புக்கோழியும் இரவில் ஆண் நெருப்புக்கோழியும் அடைகாக்கும். காரணம் என்ன தெரியுமா? பெண் நெருப்புக்கோழி பழுப்பு நிறத்திலும் ஆண் நெருப்புக்கோழி கருப்பு நிறத்திலும் இருப்பதால் அடைகாக்கும்போது எதிரியின் பார்வைக்கு எளிதில் தென்படாது என்பதால்தான்.
நெருப்புக்கோழி ஒரு முட்டாள் பறவை என்றும் ஆபத்து வந்தால் தலையை மட்டும் மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு முழு உடம்பையும் மறைத்துக்கொள்வதாக நினைத்துக்கொள்ளும் என்றும் சொல்லப்படுவது உண்டு. ஆனால் அது உண்மை இல்லை.
ஆபத்து சமயத்தில் அது தன் கால்களை மடக்கி தரையில் அமர்ந்து தலையையும் தாழ்வாக வைத்துக்கொள்ளும். எதிரியின் கண்ணில் படாமலிருக்கவே இந்த உத்தியை மேற்கொள்ளும். அதைத்தான் நாம் தவறாக நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் நெருப்புக்கோழிகள் மிகுந்த புத்திசாலித்தனமும் சாதுர்யமும் நிறைந்தவை.
சுட்டிகளே, இந்த மாதம் நெருப்புக்கோழி பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு தனித்துவமான பறவை பற்றி அறிந்துகொள்ளலாம். அதுவரை காத்திருங்க.
(படம் உதவி Pixabay)